தண்ணீர் பிரச்சினைக்காக டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்: சிறையில் இருந்து கேஜ்ரிவால் வாழ்த்து


புதுடெல்லி: டெல்லியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை முன்னிட்டு, ஹரியாணாவில் இருந்து கூடுதல் தண்ணீர் கோரி இன்று (ஜூன் 21) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கி இருக்கும் டெல்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷிக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே வாழ்த்து தெரிவித்துள்ளார். "அதிஷி இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்காக கூடுதல் தண்ணீர் திறக்க ஹரியாணா அரசை வலியுறுத்தி தெற்கு டெல்லியின் போகலில் அமைச்சர் அதிஷி இன்று தனது காலவரையற்ற உண்ணாவிரத்தைத் தொடங்கினார். அப்போது கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அங்கு இருந்தனர். அப்போது உண்ணாவிரதத்தை வாழ்த்தி சிறையில் இருக்கும் முதல்வர் கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தை சுனிதா வாசித்தார்.

கேஜ்ரிவால் தனது கடிதத்தில், "அதிஷியின் ‘தபஸியா’ (அர்ப்பணிப்பு) வெற்றியடையும் என்று நான் நம்புகிறேன். கடும் வெப்பம் காரணமாக தண்ணீர் இல்லாமல் டெல்லி மக்கள் தவிப்பதை தொலைக்காட்சியில் பார்த்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். தவித்தவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதே நமது கலாச்சாரம். டெல்லி அதன் அண்டை மாநிலங்களில் இருந்து தனக்கான தண்ணீரைப் பெற்று வந்தது.

இந்தக் கடுமையான வெப்பம் நிலவும் நிலையில் அண்டை மாநிலங்களின் ஆதரவினை நாங்கள் மிகவும் நம்புகிறோம். ஆனால், டெல்லிக்கு ஹரியாணா வழங்கும் தண்ணீரின் அளவினை குறைத்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் இருவேறு கட்சிகள் ஆட்சி செய்கிறது என்றாலும், இது தண்ணீர் அரசியலுக்கான நேரம்" என்று தெரிவித்துள்ளார். ஹரியாணாவில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்வதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன்பாக அதிஷி, சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங், டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் கட்சியின் பிற தலைவர்களுடன் ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அனைத்து வழிகள் முயற்சி செய்தும் ஹரியாணா அரசு டெல்லிக்கு தரவேண்டிய அதன் முழு தண்ணீர் பங்கினையும் தராததால், போகலில் தான் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்தார்.

முன்னதாக, தனது எக்ஸ் தள பதிவில் அதிஷி, "இன்று நான் எனது பானி சத்தியாகிரகத்தினைத் தொடங்குவேன். போகலின் ஜங்புராவில் 12 மணி முதல் தொடங்கும் அந்த உண்ணாவிரதம், டெல்லி மக்கள் ஹரியாணாவில் இருந்து அவர்களின் தண்ணீர் உரிமையினை முழுமையாக பெறும் வரை காலவரையின்றித் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "டெல்லிவாசிகளின் தேவைக்கு வழக்கமாக தினமும் 1005 மில்லியன் கேலன் (எம்ஜிடி) தண்ணீர் பெறப்பட்டு வந்தது. இந்தநிலையில், கடந்த இரண்டு வாரங்களாக ஹரியாணா அரசு வழக்கமாக வழங்கும் 613 எம்ஜிடி தண்ணீருக்கு பதிலாக 513 எம்ஜிடி தண்ணீர் மட்டும் வழங்கி வருகிறது. இதனால் 2.8 மில்லியன் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாளில் ஹரியாணா அரசு டெல்லிக்கு வழங்கும் தண்ணீர் அளவினை 100 முதல் 120 எம்ஜிடி வரை குறைத்துள்ளது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக டெல்லியின் பல பகுதிகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. நீர்வரத்து குறைவால் டெல்லியில் குடிநீர் நிலையங்களில் நீர் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதே அதற்கு முக்கிய காரணம். வட இந்தியாவில் நிலவி வரும் கடுமையான வெப்பம் இந்தப் பிரச்சினையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.