இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: காங். தலைவர் கார்கே நம்பிக்கை


நான்காம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ஜூன் 4-ல் மத்தியில் இண்டியா கூட்டணியின் ஆட்சி அமையும் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்தார். கார்கே மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது கார்கே கூறியதாவது: நான்காம் கட்ட தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி மிகவும் வலிமை வாய்ந்ததாக மாறியுள்ளது. ஜுன் 4-ல் வாக்குகள் எண்ணப்படும்போது மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். அதன்பிறகு ஏழை மக்களுக்கு மாதம் 10 கிலோ இலவச ரேஷன் வழங்கப்படும் திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும்.

நடந்து முடிந்த 4 -கட்ட தேர்தலில் மோடியை பிரதமர் பதவியிலிருந்து விடுவிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. இந்த தேர்தல் இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காப்பதற்கான மிக முக்கியமான தேர்தல் ஆகும். பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் முக்கிய தடையாக எதேச்சதிகாரம் மற்றும் சர்வாதிகாரம் உள்ளது.

முன்னணி பாஜக தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தடுக்கப்படுவதிலிருந்து இதனை நாம் அறிந்து கொள்ளலாம். இதற்கெல்லாம் உச்சமாக, ஹைதராபாத்தில் பாஜக கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவர், வாக்களிக்க வந்தவர்களின் பர்தாவைக் கழற்றி பெண்களின் அடையாளத்தை சோதனை செய்கிறார்.

இதுதான் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதன் அடையாளமா என்பதை தேர்தல் ஆணையம்தான் விளக்க வேண்டும். இவ்வாறு கார்கே கூறினார்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறுகையில், “ ஜூன் 4-ம் தேதி பொற்காலத்தின் தொடக்கம். அது பத்திரிகை சுதந்திரத்தின் நாளாகவும் அமையும். உத்தர பிரதேசத்தில் 79 மக்களவை தொகுதிகளை இண்டியா கூட்டணி கைப்பற்றும். எஞ்சியுள்ள ஒரே இடத்துக்குதான் தற்போது போட்டி என்றார்.