கேஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டதற்கு ஆதாரம் உள்ளதாக அமலாக்கத் துறை தகவல்


புதுடெல்லி: மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ரோஸ் அவன்யூ நீதிமன்றம் ஜூலை 3 தேதி வரை நீட்டித்துள்ளது.

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுவினை விசாரணை செய்த ரேஸ் அவன்யூ நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்தது. விசாரணையின் போது, தற்போது கைவிடப்பட்டுள்ள மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் ரூ.100 கோடி கிக்பேக் கேட்டதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, "இந்த வழக்கில் பணமோசடி குற்றச்சாட்டினை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் இணை குற்றவாளிகளான டெல்லி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது பணமோசடி குற்றச்சாட்டினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்பதைக் காட்டுகிறது.

பணமோசடி குற்றச்சாட்டினை நீதிமன்றம் விசாரிப்பது, முதல் பார்வையில் இங்கு பணமோசடி நடந்திருப்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்பதைக் காட்டுகிறது. அரவிந்த் கேஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டது சிபிஐ விசாரணையில் தெரியவிந்துள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்பே நாங்கள் ஆதாரத்தை சேகரித்து விட்டோம்" என்று தெரிவித்தார். டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் காணொலி காட்சி வழியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனிடையே, அரவிந்த் கேஜ்ரிவால் சார்பில் ஆஜரான விக்ரம் சவுதரி, "ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பெயர் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எந்த குற்றப்பத்திரிகையிலும் இடம்பெறவில்லை. சிபிஐ பதிவு செய்துள்ள எந்த ஒரு முதல் தகவல் அறிக்கையிலும் கேஜ்ரிவால் குற்றாவளி என்று குறிப்பிடப்படவில்லை.

சிபிஐ என்ன குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அவை பிஎம்எல்ஏ-வின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவை அல்ல. மாறாக அவை சிபிஐ-ன் வழக்குகளே. மேலும் உச்ச நீதிமன்றம் மே 10-ம் தேதி வழங்கிய உத்தரவில், கேஜ்ரிவால் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று அனுமதி அளித்துள்ளது.

இந்த ஒட்டு மொத்த வழக்கும், இதே வழக்கில் முன்பு கைது செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போடப்பட்டது. அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அவர்கள் யாரும் புனிதர்கள் இல்லை. அவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே.

இந்த ஒட்டுமொத்த வழக்கும் 2022 ஆகஸ்ட்டில் தொடங்கியது. அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது 2024 மார்ச் மாதம் தேர்தலுக்கு முன்பாக நடந்தது. அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரத்தில் ஒரு உள்நோக்கம் உள்ளது" என்று தெரிவித்தார்.