தேர்தல் இடைவெளிக்கு பின்பு ஜூன் 30-ல் மீண்டும் தொடங்குகிறது பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’


புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ (Mann Ki Baat) நிகழ்வு இம்மாதம் ஜூன் 30-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளபக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள பதிவொன்றில், "தேர்தல் காரணமாக சில மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் மனதின் குரல் நிகழ்வு மீண்டும் வந்துவிட்டது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாத நிகழ்ச்சி ஜூன் 30, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நிகழ்ச்சிக்காக ஐடியாக்களை தெரிவிக்கும் படி மக்களை வலியுறுத்தியுள்ள பிரதமர், மக்கள் தங்களின் தகவல்களை MyGov ஓபன் ஃபோரம் அல்லது NaMO செயலி வழியாகவும் 1800 11 7800 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மாதா மாதம் ஒலிபரப்பாகும் மனதின் குரல் நிகழ்ச்சி 2024 மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் கடைசி நிகழ்ச்சி பிப்.25-ம் தேதி ஒலிபரப்பானது. இந்த தொடர்நிகழ்ச்சியின் 110-வது ஒலிபரப்பான அதில், தேர்தலில் வாக்களிக்கும் படி முதல் முறை வாக்காளிக்க இருக்கும் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். நாட்டுக்காக சாதனை அளவினை எட்டும் அளவுக்கு வாக்களிக்குமாறு அவர் முதல் முறை வாக்களார்களிடம் தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதியின்படி, அதிகாரபூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிதியைப் பயன்படுத்தும் தளங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை விட நியாயமற்ற வகையில் அரசு பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. இதன் காரணமாகவே பிரதமரின் மனதின் குரல் நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கடைசி நிகழ்வின் போது பிரதமர் மோடி, "மனதின் குரல் நிகழ்வு மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் நிகழ்ச்சி தான் என்றாலும், அரசியல் மாண்பு காப்பதற்காக, மக்களவைத் தேர்தல் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு மனதின் குரல் ஒலிபரப்பாகாது" என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த கடைசி நிகழ்வில், "நண்பர்களே அடுத்த முறை நான் உங்களுடன் பேசும்போது, புதிய சக்தி மற்றும் புதிய தகவல்களை உங்களைச் சந்திக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.