[X] Close

விஜய் மல்லையா விவகாரம்; நிறுவன சட்டங்களில் திருத்தம் தேவை: அரசுக்கு `செபி’ வலியுறுத்தல்


vijay-mallaya-case

  • kamadenu
  • Posted: 05 Mar, 2019 10:55 am
  • அ+ அ-

நீதிமன்ற வழக்குகளில் சிக்கிய நபரை நிறுவன இயக்குநர் குழுவில் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து வெளியேற்ற ஏதுவாக நிறுவன சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா வகித்த நிறுவன இயக்குநர் பதவியிலிருந்து அவர் வெளியேறாத நிலையில் அவரை வெளியேற்றம் செய்யும் அதிகாரத்தை சட்ட ரீதியாக மேற்கொள்ளும் வகையில் நிறுவன சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று செபி வலியுறுத்தியுள்ளது.

இப்போது உள்ள நிறுவன சட்டத்தில், ஒரு நிறுவனத்தின் இயக்குநர் பதவி வகிப்பவர் மீது நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது வேறு ஏதேனும் வழக்கு இருக்குமானால் அவர் பதவி விலக வேண்டும். ஆனால் இது தொடர்பாக உரிய வழிகாட்டுதல் எதையும் செபி வரையறுக்கவில்லை. அவ்விதம் வகுக்கப்படுமாயின் அது இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல ஆயிரம் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

அதற்கேற்ப நிறுவன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் செபி வலியுறுத்தியுள்ளது.

செபி-யின் இந்த பரிந்துரையை நிதி அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பாக உரிய அனுமதியை அளிக்குமாறு நிறுவன விவகார அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது. நிறுவன விவகார அமைச்சகம்தான் நிறுவன சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பரிந்துரையோடு ஜனவரி 25, 2017-ல் வெளியிட்ட உத்தரவையும் செபி இணைத்துள்ளது. அதில் மல்லையா மற்றும் 6 பேர் எந்த நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இடம்பெறக் கூடாது என உத்தரவு பிறப்பித்த கடித நகலும் இணைக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close