[X] Close

ராஜஸ்தானில் 3 தொகுதிகளில் களமிறங்கும் பிடிபி- கலக்கத்தில் காங்கிரஸ்


rajasthan-pdp

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 10:32 am
  • அ+ அ-

ராஜஸ்தானில் வரும் மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட பாரதிய பழங்குடியினர் கட்சி (பிடிபி) முடிவு செய்துள்ளது.

இதனால், அந்த தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா என்ற கலக்கத்தில் காங்கிரஸ் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜகவை தோற்கடித்து தனிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில், ராஜஸ்தானில் உள்ள 25 மக்களவைத் தேர்தலுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் உடனடியாக ரத்து செய்யப்படும் என அக்கட்சி அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

இதனை சுட்டிக்காட்டி, மக்களை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டதாக பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. எனவே, வரும் தேர்தலில் மீண்டும் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.

இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளை கைப்பற்றிய பிடிபி கட்சி, தற்போது அங்கு 3 மக்களவைத்தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. உதய்பூர், பன்ஸ்வாரா-தங்கர்பூர், டவ்சா ஆகிய தொகுதிளில் அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது.

இந்த தொகுதிகள் யாவும் பழங்குடியின மக்கள் ஆதிக்கம் நிறைந்தவை என்பதால், அங்கு பிடிபி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் தொகுதிகள் முன்பு காங்கிரஸின் கோட்டையாக கருதப்பட்டு வந்தன.

எனவே, இந்த தொகுதிகளை தற்போது பிடிபி கட்சியிடம் பறிகொடுத்து விடுவோமா என்ற கலக்கத்தில் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். இதன் காரணமாக, அந்த தொகுதிகளில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக அறிவிக்கலாமா என்பது குறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close