[X] Close

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவோம்: பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி நம்பிக்கை


india-united-against-evil-designs-of-enemies-modi

  • போத்திராஜ்
  • Posted: 28 Feb, 2019 16:01 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி, ஐஏஎன்எஸ்

வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, ஆதலால், பாஜக தொண்டர்கள் எந்தவிதமான தவறும் செய்யக்கூடாது என்று பிரதமர் மோடி பாஜக தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்.

நாடுமுழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள், ஆர்வலர்கள் மத்தியில் உலகின் மிகப்பெரிய அளவில் கானொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அதில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த நாட்டு மக்களுக்கு அடுத்த 5 ஆண்டுகள் சேவை செய்ய மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். எங்களுடைய முயற்சியில் ஏதேனும் பலவீனம் இருந்திருந்தால், கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் செய்த பணிகள் அழிந்துபோகும்.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன், அதாவது நாம் ஆட்சிக்கு வரும் முன், அரசில் ஊழல் நிரம்பி இருந்தது. கொள்கை முடிவுப்படி செயல்பட முடியாத சூழல் இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும் முன், இந்தியா பொருளாதாரத்தில் 11-வது இடத்திலிருந்தது.

 இப்போது, உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது, 6-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. உலகப்பொருளாதாரத்தில் 3-வது இடத்துக்கு முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அது விரைவில் நடக்கும்.

2014-ம் ஆண்டு தேர்தல் என்பது நாட்டின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய தேர்தலாக இருந்தது. 2019-ம் ஆண்டு தேர்தல் களம் என்பது, ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்புகளைச் சந்திப்பதாக இருக்கும்.

நம்முடைய எதிரிகள்  இலக்கு வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவது. அதற்காகச் சதித்திட்டம் தீட்டி, தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி நாட்டை அழிக்க முயல்கிறார்கள் அந்த துஷ்ட சக்திக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாக நிற்பது அவசியம். இந்த நாடு வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்பதை நாம் வெளிப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் வீரர்கள் தங்களின் துணிச்சலான நடவடிக்கையால் நாட்டை எதிரிகளிடம் இருந்து காத்து வருகிறார்கள். அவர்களால்தான் நமது நாடு பாதுகாப்பு, அமைதியாக இருக்கிறது. அவர்களால்தான் நாடு வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் நாம் கடினமாக உழைப்பது அவசியம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close