1,563 பேருக்கு நீட் மறுதேர்வு முதல் குவைத் தீ விபத்து அப்டேட் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு மறுதேர்வு: நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி இந்த மறுதேர்வு வரும் ஜூன் 23-ம் தேதி நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் ஜூன் 30-ம் தேதி அன்று வெளியாகிறது. இதனை தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அப்போது, கலந்தாய்வு பணிகள் பாதிக்கப்படாத வகையில் மறுதேர்வை விரைந்து நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

> புரி ஜெகந்நாதர் கோயிலின் நான்கு கதவுகள் திறப்பு: ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் கோயிலின் நான்கு கதவுகளும் பக்தர்களின் வசதிக்காக வியாழக்கிழமை முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகநாதர் கோயிலின் மூன்று கதவுகளும் கரோனா பெருந்தொற்று பரவலின் போது மூடப்பட்டது. முன்னதாக, நேற்று நடந்த ஒடிசா அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.

> அருணாசல் முதல்வராக பெமா காண்டு மீண்டும் பதவியேற்பு: அருணாச்சலப்பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பெமா காண்டு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு மாநில ஆளுநர், கே.டி. பர்நாயக் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜு, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா கலந்து கொண்டனர்.

> தோடா தாக்குதல் தீவிவாதிகள் மாதிரி படம் வெளியீடு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் நடந்த இரண்டு பயங்ரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் மாதிரி தோற்ற படங்களை தோடா போலீஸார் புதன்கிழமை வெளியிட்டனர். மேலும், அவர்கள் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

> போக்சோ வழக்கில் எடியூரப்பா கைது செய்யப்படலாம்!: தேவைப்பட்டால் பாஜக மூத்த தலைவர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்படலாம் என்றும், இதுகுறித்து மாநில குற்றப்புலனாய்வுத் துறை (சிஐடி) முடிவு செய்யும் என்றும் கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறத்தல் கொடுத்ததாக கர்நாடகா முன்னாள் முதல்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, பாலியல் துன்புறத்தல் வழக்கு குறித்த விசாரணைக்காக ஆஜராகுமாறு சிஐடி புதன்கிழமை எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பிருந்தது.

> கடும் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட வடக்கு சிக்கிம்: கனமழை காரணமாக அடுத்ததடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வடக்கு சிக்கிம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தீஸா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பலர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.

> ஹரியாணாவில் இருந்து நுழையும் தண்ணீர் டேங்கர் மாஃபியா: தேசிய தலைநகரில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள டெல்லி ஆம் ஆத்மி அரசு, "ஹரியாணா பகுதியில் இருந்து தண்ணீர் டேங்கர் மாஃபியாக்கள் டெல்லி நகருக்குள் நுழைவதாகவும், அதிகார வரம்பு பிரச்சினை காரணமாக தண்ணீர் டேங்கர் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

> குவைத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலி: குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர். இந்த கட்டிடம் குவைத் நாட்டை சேர்ந்தவருக்கு சொந்தமானது. விபத்துக்கான காரணம் குறித்து அலசுகையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்களின் உடல்களை கொண்டுவருவதற்காக இந்திய விமானப்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

> குவைத் தீ விபத்தில் தமிழர் உயிரிழப்பு: குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவர் ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூரைச் சேர்ந்தவர். கருப்பணன் ராமுவின் உறவினர்கள் மூலம் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

> T20 WC-ல் நியூஸி.க்கு 2-வது தோல்வி: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - சி’ ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 13 ரன்களில் வென்றுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இது நியூஸிலாந்து அணிக்கு முதல் சுற்று ஆட்டத்தில் இரண்டாவது தோல்வியாக அமைந்துள்ளது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான், இரண்டாவது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் நியூஸிலாந்து தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த அணி முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.