[X] Close

140 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தீவிர போர் பயிற்சி; பாகிஸ்தானுக்கு தண்டனை வழங்க தயார்: இந்திய விமானப்படை தளபதி எச்சரிக்கை


pakistan-issue

ராஜஸ்தானின் பொக்ரான் பாலைவனத்தில் விமானப் படை சார்பில் பிரம்மாண்ட போர்ப்பயிற்சி நடைபெற்றது.படம்: விஜய் சோனிஜி

  • kamadenu
  • Posted: 19 Feb, 2019 08:36 am
  • அ+ அ-

பாகிஸ்தானுக்கு தண்டனை வழங்க தயாராக உள்ளோம் என்று இந்திய விமானப்படைத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய விமானப் படை சார்பில் கடந்த 1953 ஜூலையில் முதல்முறையாக போர் பயிற்சி நடத்தப்பட்டது. அதன்பின் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போர் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் ராஜஸ்தானின் பொக்ரான் பாலைவனப் பகுதியில் கடந்த 8-ம் தேதி விமானப் படையின் போர் ஒத்திகை தொடங்கியது. இது பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ளது. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த போர் விமானங்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வந்தன. உச்சகட்டமாக கடந்த 16-ம் தேதி முழுமையான போர் பயிற்சி நடைபெற்றது. இதில் மிக் 29, எஸ்.யு. 30, மிராஜ் 2000, ஜாகுவார், மிக் 21, பைசன், ஐஎல்78, ஹெர்குலிஸ், ஏஎன் 32, தேஜாஸ் ரகங்களைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்று இலக்குகளை துல்லியமாக அழித்தன. ஆகாஷ், அஸ்திரா உள்ளிட்ட ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டன.

ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா, முப்படைகளின் மூத்த அதிகாரிகள், விமானப்படையின் கவுரவ கேப்டன் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் போர் பயிற்சியை நேரில் பார்வையிட்டனர்.

விமானப்படை தளபதி தனோவா கூறியபோது, ‘‘ராணுவரீதியாக இந்தியாவை தோற்கடிக்க முடியாது. அதனால்தான் எதிரி நாடுகள் மறைமுகமாக போர் தொடுக்கின்றன. எதிரி (பாகிஸ்தான்) நாட்டுக்கு தண்டனை வழங்க தயார் நிலையில் உள்ளோம். அரசியல் தலைமை உத்தரவிட்டால் உடனடியாக தாக்குதல் நடத்தப்படும். பொக்ரான் போர் பயிற்சியில் விமானப்படையின் வலிமையை எதிரிகளுக்கு உணர்த்தியுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில் விமானப் படையின் போர் பயிற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close