[X] Close

பாகிஸ்தானுக்கு ஆதாரவாக வாட்ஸ்அப்பில் கருத்து பதிவிட்ட கர்நாடக ஆசிரியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது


pro-pakistan-social-media-posts-karnataka-schoolteacher-arrested-for-sedition

  • போத்திராஜ்
  • Posted: 18 Feb, 2019 11:34 am
  • அ+ அ-

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புல்வாமாவில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், சவுந்தட்டி அருகே இருக்கும் கடாபி சிவப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துக்களை தனது வாட்ஸ்அப்பில் தெரிவித்துள்ளார்.

 இது சிலருக்கு பார்வேர்டு செய்யப்பட்டு, வைரலாகி பரவியுள்ளது. இதையறிந்த சிலர் ஆசிரியையின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து, ஆசிரியை வசித்துவந்த வீட்டுக்கு தீவைத்து கொளுத்த முயற்சித்தனர்.

இந்த தகவல் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆசிரியையின் வீட்டை கொளுத்த முயன்றவர்களையும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட ஆசிரியையும் கைது செய்தனர்.

இது குறித்து பெலகாவி மாவட்ட  போலீஸார் எஸ்பி. சுதீர் ரெட்டி கூறுகையில், " பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அந்த ஆசிரியையின் பதிவு குறித்து மாலை 5 மணி அளவில் அறிந்தோம். அடுத்த சில மணிநேரத்தில் அந்த ஆசிரியை கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆசிரியை  வீட்டை சிலர் தீவைத்து கொளுத்த முயன்றனர். அந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த ஆசிரியை மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரிவு 124,124ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் " எனத் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து கைது செய்யப்பட்ட 2-வது நபர் இந்த ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் புல்வாமா தாக்குதலை நியாயப்படுத்தி மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

4 காஷ்மீர் மாணவிகள் மீது வழக்கு

ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் கல்லூரி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் பல்கலையில் படித்து வந்த மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை சந்த்வாஜி பகுதி போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

இந்த பல்கலையில் பயிலும் 2-ம் ஆண்டு மாணவிகள் சிலர் சமூக ஊடகங்களில் புல்வாமா தாக்குதலை நியாயப்படுத்தி பதிவுகளை வெளியட்டினர். இதையடுத்து, 4 மாணவிகள் மீது போலீஸார் தேசிய பாதுகாப்புச் சட்டம் 124ஏ, (இரு குழுக்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்துதல்) 153ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 4 பேர் புல்வாமா தாக்குதலை நியாயப்படுத்தியும், பாகிஸ்தானுக்கு ஆதரவும் கருத்துக்களை தெரிவித்தனர். இவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்தரப்பிரதேசம் மந்தனாப்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒசாமா தனது ஃபேஸ்புக்கில் புல்வாமா தாக்குதலை நியாயப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டார். இவர் மீத ஐபிசி 153ஏ மற்றும் ஐடி சட்டம் 66 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close