[X] Close

ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக தமிழக தொழிலதிபரிடம் ரூ.1 கோடி மோசடி: 7 பேர் கைது


gang-rents-a-room-in-vidhana-soudha-dupes-businesspersons

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Feb, 2019 11:21 am
  • அ+ அ-

ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி தமிழக தொழிலதிபரிடம் ரூ.1.12 கோடி மோசடி செய்த பெங்களூருவைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான கார்த்திகேயன் (60) என்பவர் கைதாகியுள்ளார். இவர் தன்னை அமைச்சர் என்று கூறி சம்பந்தப்பட்ட நபரை ஏமாற்றியுள்ளார்.

தொழிலதிபரை ஏமாற்றியது எப்படி?
கார்த்திகேயனின் வேலையே மோசடி செய்வதுதான். ஆனால், கர்நாடகா சட்டப்பேரவைக் காவலர்கள் சிலரை கைக்குள் போட்டுக்கொண்டு அங்கு சர்வ சாதாரணமாக உள்ளே நுழைவதும் உலா வருவதுமாக அவர் இருக்கிறார்.

தமிழக தொழிலதிபரை கார்த்திகேயனும் அவரது கூட்டாளிகளும் எப்படி ஏமாற்றினார்கள் என்பது குறித்து போலீஸார் கூறியதாவது:
கார்த்திகேயன் தன்னை ஒரு அமைச்சர் என்று அடையாளம் காட்டியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையான விதான் சவுதாவில் உள்ள சில காவலரளுக்கு லஞ்சம் கொடுத்து வளாகத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கே தனக்கு பெரும் செல்வாக்கு இருப்பது போல் காட்டிக்கொள்ள நிறைய முன்னேற்பாடுகளை போலியாக செய்துள்ளார்.

கார்த்திகேயனுக்கு அவரது மகன் ஸ்வரூப்பும் (30) உதவியாக இருந்துள்ளார். மோசடி கும்பலில் உள்ள மற்ற நபர் மணிகண்டவாசகன் என்ற அஜய், சுமன் (27), அபிலாஷ் (27),  கார்த்திக் (34), ஜோமோன் (49), பிரபு (30).

கோவையைச் சேர்ந்த ரமேஷ், முந்திரி வியாபாரி. இவர் தனது தொழிலை வளர்க்க ரூ.100 கோடி கடன் பெற முயற்சித்து வந்துள்ளார். இது தொடர்பாக ரமேஷும் அவரது தொழில் முறை நண்பர் இந்திராவும் முதலீட்டாளர்களைத் தேடி பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். அப்போதுதான் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த ஒரு கும்பல் பண விஷயத்தில் உதவுவதாக சொல்லியுள்ளனர். விதான் சவுதாவில் தங்களுக்கு ஒரு அமைச்சரைத் தெரியும் என்றும் அவர் இந்த விஷயத்தில் உதவுவார் என்றும் கூறியுள்ளனர்.

ஜனவரி 2, 2019-ல் ரமேஷும் இந்திராவும் விதான் சவுதாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு கார்த்திகேயனிடம் அவர்களை அறிமுகம் செய்துள்ளனர். ஆனால், கார்த்திகேயன் தன்னை கே.கே.ஷெட்டி என்றும் கர்நாடக அமைச்சர் என்றும் கூறியுள்ளார். ரமேஷ் - இந்திராவிடம் பேசிய கார்த்திகேயன், தனக்கு தெரிந்த சில நண்பர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை தொழில்களில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். கடன் தொகையைப் பெற செக்யூரிட்டி, பாண்ட் ஆகியனவற்றைக் கொடுத்தால் பணம் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். ஏக தடபுடலுடன் தனது மெய்க்காப்பாளர்கள் போல் சஃபாரி சூட் அணிந்த 4 பேரை தன்னைச் சுற்றி வைத்திருந்ததால், ரமேஷும் இந்திராவும் கார்த்திகேயனை நம்பியுள்ளனர். 

விதான் சவுதாவின் முதல் மாடியில் காலியான அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார் கார்த்திகேயன். இதற்கு மஹாதேவசாமி என்ற ஊழியர் உதவியிருக்கிறார். லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர் இதனை செய்திருக்கிறார்.

ரூ.100 கோடி முதலீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரமேஷும் இந்திராவும் ரூ.1.12 கோடி ஸ்டாம்ப் ட்யூட்டியாக செலுத்த முன்வந்துள்ளனர்.
முன்பணமாக ரூ.50,000-ஐ மட்டும் ரமேஷ் ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்திருக்கிறார். ஆனால் அதன்பின்னர் ரமேஷால் கார்த்திகேயன் மற்றும் குழுவினரை திடர்பு கொள்ளவே முடியவில்லை.

தான் ஏமாற்றப்பட்டது அறிந்த ரமேஷ்  புகார் கொடுத்தார். அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் ஆன்லைனில் பணம் செலுத்தப்பட்டது கார்வாரில் உள்ள ஒரு கோயிலின் தர்மகர்த்தாவான பிரபு என்பவரின் கணக்குக்குச் சென்றது தெரியவந்தது. பிரபுவை வைத்து மற்ற குற்றவாளிகளை கரூரில் கைது செய்துள்ளனர்.

இந்தக் குழுவினர் அனைவருமே, தமிழகத்தில் இருந்துதான் செயல்படுகின்றனர். தொழிற்கடனுக்காக முயற்சிக்கும் தொழிலதிபர்களை நாடி மோசடி செய்வதே இவர்கள் உத்தி.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close