[X] Close

பொய், முரட்டுத்தனம், மிரட்டல் ஆகியவைதான் மோடி அரசின் தத்துவங்கள்: சோனியா காந்தி விளாசல்


bluff-bluster-intimidation-have-been-modi-govts-philosophy-sonia-gandhi

  • போத்திராஜ்
  • Posted: 13 Feb, 2019 16:04 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

பொய், முரட்டுத்தனம், மிரட்டல் ஆகியவைதான் மத்தியில் ஆளும் மோடி அரசின் தத்துவங்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காட்டமாக விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

புதிய நம்பிக்கையுடன், தீர்மானத்துடன் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நமக்குக் கிடைத்த வெற்றி புதிய நம்பிக்கையை அளித்திருக்கிறது.

நம்முடைய அரசியல் எதிரிகள் தங்களை வெல்லமுடியாது என்று முன்பு திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி, கட்சியைச் சிறப்பாக வழிநடத்தி, லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்து, தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அளித்து, வலிமையை நிரூபித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில், நம்முடைய ஜனநாயகத்தின், மதச்சார்பற்ற குடியரசின் அடித்தளத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. நம்முடைய அரசமைப்பின் மதிப்புகள், கொள்கைகள், விதிகள் ஆகியவை தொடர்ந்து மோடி அரசில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

அரசுநிறுவனங்கள் பல திசைமாற்றப்படுகின்றன. அரசியல் எதிரிகள் வேட்டையாடப்படுகிறார்கள். எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அடக்கப்படுகிறார்கள். பேச்சு, கருத்து சுதந்திரம், அனைத்து அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவை அடக்கப்பட்டு, மவுனமாகப்படுகிறது.

பொய், முரட்டுத்தனம், அச்சுறுத்தல் ஆகியவைதான் மோடி அரசின் தத்துவங்களாக இருக்கின்றன. உண்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவை வெட்கமில்லாமல் தூக்கிவீசப்படுகின்றன.

கடந்த 5 ஆண்டுகளாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார அழுத்தம், சமூகத்தில் வலி ஆகியவை இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் கொதிப்பில் இருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் உச்சக்கட்டமாக தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. தலித், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகின்றனர். விவசாயிகள் எப்போதும் இல்லாத அளவுக்குப் பிரச்சினைகளையும், அழுத்தத்தையும் சந்திக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்தில் இளைஞர்கள் தவிக்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றம் கணக்கிடமுடியாத அளவுக்குப் பலவீனப்படுத்தப்பட்டு, விவாதங்களுக்கும், கலந்தாய்வுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நிலைக்குழுக்கள் இருந்தாலும் அவை காணாமல் போய்விட்டன. ஆதார் மசோதாவை நிதி மசோதாவை நிறைவேற்றியதை அரசியமைப்புச்சட்டத்தை மோசடி செய்துவிட்டீர்கள் என்று உச்ச நீதிமன்றமே கண்டித்தது.

வரும் மக்களவைத் தேர்தலில் நம்முடைய அரசியல் எதிரிகளை வெற்றிபெறவிடக்கூடாது. அவர்களுக்கு கடும் போட்டியைத் தர வேண்டும். நாம் முழு வீரியத்துடன் அவர்களுக்கு எதிராகத் தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டும்.

நாடாளுமன்றத்தின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஆதராக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close