[X] Close

பாஜக திட்டங்கள் தோல்வி; தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி  நிதி பாக்கி: மத்திய அரசை விளாசிய தம்பித்துரை


thambidurai-says-demonetisation-has-destroyed-the-informal-sector-and-small-businesses

  • போத்திராஜ்
  • Posted: 11 Feb, 2019 13:31 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி,

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் சிறுதொழில்கள், அமைப்பு சாரா தொழில்கள் நசிந்து, அழிந்துவிட்டன. தமிழகத்துக்கு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு தராமல் தாமதம் செய்து வருகிறது என்று மக்களவை துணைத் தலைவரும், அதிமுக எம்.பி. தம்பித்துரை காட்டமாகப் பேசினார்.

மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. மக்களவையில் இன்று நடந்த விவாதத்தில் அதிமுக எம்.பி.யும், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை பேசினார். அப்போது, அவரைப் பேசவிடாமல் தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டு இடையூறு செய்தவாறு இருந்தனர். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.

அவர்களை நோக்கிப் பேசிய தம்பித்துரை நான் உங்களுக்காகவும் சேர்த்துத்தான் பேசுகிறேன். தயவுசெய்து அமைதியாக இருங்கள் என்று கூறியவுடன் எம்.பி.க்கள் அமைதியாகினார்கள்.

மக்களவையில் தம்பித்துரை பேசியதாவது:

இந்தத் தேசம் விரைவில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் சூழலில் தாக்கல் செய்துள்ள இந்த இடைக்காலபட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது இடைக்கால பட்ஜெட்டாக இருந்திருக்க வேண்டும், ஆனால், மக்களைக் கவரும் ஏராளமான கவர்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் இதை அறிவித்திருக்கலாம் ஆனால், அப்போதெல்லாம் அறிவிக்கவில்லை.

நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தி (ஜிடிபி) உயர்ந்துள்ளது வரவேற்கக்கூடியது என்றாலும், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது மிகப்பெரிய அளவு அதிகரித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைபஞ்சம் நிலவுகிறது.

விவசாயிகள், வேளாண் சார்ந்த பிரச்சினைகள் இந்த ஆட்சியில் தொடர்கின்றன. ஏறக்குறைய 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தது என்னாயிற்று. விளைபொருட்களுக்கு ஆதாரவிலை உயர்த்தப்பட்டாலும், வருமானம் இரட்டிப்பாக்கப்படவில்லை.

பிரதமரின் விவசாயிகள் திட்டம் என்பது நிலம் வைத்துள்ள விவசாயிகளை மட்டும் பொருந்துகிறது, நிலம் இல்லாத விவசாயிகளுக்கு உதவவில்லை.

மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதிபோதாது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஒதுக்கியதைக் காட்டிலும் குறைக்கப்பட்டுள்ளது. அதை மறுஆய்வு செய்ய வேண்டும்.

என்னுடைய தொகுதியில் கட்டப்பட்டுள்ள கழிவறைகள் அனைத்தும் முறையாகக் கட்டப்படவில்லை. (புகைப்படத்தைக் காட்டினார்) நகரில் இருந்து ஒருகிலோமீட்டருக்கு அப்பால் இவை கட்டப்பட்டுள்ளன. மிகதொலைவில் உள்ள கழிவறைகளை பெண்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும்.

பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறார், பேசி வருகிறார். ஆனால், சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே வாங்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்குவதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது.

மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறுதொழில்கள், அமைப்பு சாரா தொழில்கள் அனைத்தும் நசிந்து அழிந்துவிட்டன. இதில் ஏதோ அரசியல் ஆதாயம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், எனக்கு அது புரியவில்லை.

ஜிஎஸ்டி வரியை காங்கிரஸ், பாஜக சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், மாநிலங்களுக்கு உதவாத திட்டமாகவே ஜிஎஸ்டி வரி இருக்கிறது. ஆந்திர பிரதேச எம்.பி.க்கள் நாள்தோறும் போராட்டம் நடத்துகிறார்கள். ஏனென்றால், அவர்களிடம் பணம் இல்லை. மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன.

தமிழகத்துக்கு மட்டும் மத்திய அரசு தர வேண்டிய நிதி ரூ.12 ஆயிரம் கோடி நிலுவையில் இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதிருந்து இந்த நிதியை நாங்கள் கோருகிறோம். ஆனால், மத்திய அரசு தராமல் தாமதிக்கிறது. இதுதான் கூட்டாட்சியா. எந்தவிதமான பணமும் இல்லாமல் எங்கள் மாநிலத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும்.

தமிழகம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைவெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால், அந்தத் திட்டமே தற்போது எங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. 15 நிதிக்குழுவில் மக்கள் தொகை அடிப்படையில் நிதிஒதுக்கீடு என்று கூறிவிட்டார்கள்.

இவ்வாறு தம்பித்துரை பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close