[X] Close

பிரச்சினை சிபிஐக்கும் போலீஸுக்கும்; வெற்றி மம்தாவுக்கும் பாஜகவுக்கும்: ஏன், எப்படி?- ஓர் அலசல்


why-mamata-and-bjp-are-both-right-in-claiming-victory-in-cbi-vs-police

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Feb, 2019 12:12 pm
  • அ+ அ-

வர்கீஸ் கே.ஜார்ஜ்

ஒரு பிரச்சினையில் நீதிமன்ற ஆணை ஒன்று அனைத்து கட்சிகளையும் திருப்திப்படுத்துவதாக அமைவது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. ஆனால், செவ்வாய்க்கிழமை அப்படிப்பட்ட அரிய நிகழ்வை நிகழ்த்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய இயலாது எனக் கூறிய உச்ச நீதிமன்றம் அதேவேளையில் சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்தத் தீர்ப்பைத்தான் மம்தாவும் கொண்டாடுகிறார். அவரை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகளும் கொண்டாடுகின்றன. மற்றொரு பக்கம் பாஜகவும் கொண்டாடுகிறது. பிரச்சினை என்னவோ சிபிஐக்கும் மேற்குவங்க காவல்துறைக்கும் இடையேயானதுதான் ஆனால் வெற்றியை ருசிப்பவர்கள் மம்தாவும் பாஜகவினருமாக இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான அரசியல் போட்டியில் மேற்குவங்க போலீஸும், சிபிஐ அமைப்பும் ஆதாயம் பெறுவதற்கான கூலிப்படைகள் போன்றே நடத்தப்பட்டுள்ளன.

மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றம் தனது நிலைப்பாட்டுக்கு நியாயம் செய்திருக்கிறது எனக் கூறுகிறார். பாஜக பிரமுகர்கள் பலரும் வெற்றி தங்களுடையது எனக் கூறுகின்றனர். தார்மீக வெற்றி என்பதை இந்த இடத்தில் விளக்குவது சிரமம் என்றாலும்கூட இருதரப்புமே அரசியல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது என்பேன். 

ஏன் எனக் கூறுகிறேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்ப்பதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது என்பது இப்போதைய சூழலில் யாருக்குமே ஆச்சர்யம் தரும் செய்தியாக இருப்பதில்லை. ஆனால், இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. பிப்ரவரி 3-ம் தேதி ஞாயிறுக்கிழமையன்று சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநர் பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு சிபிஐ குழு விரைகிறது. இந்த நேரத்தை நாம் கவந்த்தில் கொள்ள வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, அன்றைய தினம் அதேவேளையில்தான் இடதுசாரிகள் பெருங்கூட்டத்தைத் திரட்டி பிரம்மாண்டமாக பேரணி ஒன்றை நடத்தி முடித்திருந்தனர். பாஜகவை அகற்றுவோம், திரிணமூலை அகற்றுவோம் என்ற கோஷத்துடன் அவர்கள் வெற்றிப் பேரணி நடத்தி முடித்திருந்தனர். வெற்றியின் அடையாளமாக அவர்கள் பேரணி புகைப்படங்களை பகிரங்கப்படுத்திக் கொண்டிருந்தபோதுதான் சிபிஐ vs போலீஸ் நாடகம் அரங்கேறி இடதுசாரிகளின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

அதனால், சிபிஐ அமைப்பின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நேரம் நிச்சயமாக அரசியல் விளக்கத்தை அதுவே தருவதாக அமைந்துவிட்டது. சீட்டு நிறுவன மோசடி வழக்கு பல காலமாகவே நடந்து வருவதால், சிபிஐ அமைப்பு தொழில் ரீதியாக ஞாயிறு மாலை அத்தகைய நடவடிக்கையை எடுத்தமைக்கு வேறு எவ்வித விளக்கமும் தர இயலாது. அதனால், சிபிஐ நடவடிக்கை நடந்த நேரம் முக்கியத்துவம் பெறுகிறது.

மமதா பானர்ஜி - மோடி இடையேயான மோதல் தேசிய அளவில் தொலைக்காட்சி ஊடகங்களில் நிரந்தர முக்கியத்துவம் பெற்றிருக்கும் வேளையில் அன்றைய சிபிஐ நடவடிக்கை செய்தி இடதுசாரி முன்னனி பேரணி தொடர்பான செய்திகளை இருண்டுபோகச் செய்துவிட்டது.

ஏற்கெனவே பாஜகவுக்கு மேற்குவங்க மாநிலத்தில் அடையாளம் சொல்லும் அளவுக்கு முகங்கள் இல்லை. சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கிய திரிணமூல் காங்கிரஸின் முகுல் ராய் பாஜகவில் இணைந்துவிட்டார். இதனால், பாஜகவுக்கு தார்மீக அடிப்படையில் இந்தப் பிரச்சினையில் பேச நியாயம் இல்லாமல் போய்விட்டது. 

ஆனாலும் பாஜகவால் தேர்தலில் 2-வது இடத்தையாவது பிடிக்கும் சூழல் இருக்கிறது. இதனால் காங்கிரஸ், இடது சாரி உறுப்பினர்கள் பலரும் ஒன்று திரிணமூல் பக்கம் அல்லது பாஜக பக்கம் சாயும் சூழல் உள்ளது. இதன் சாட்சிதான் அண்மையில் காங்கிரஸ் எம்.பி மவுசம் பெனாசிர் நூர் திரிணமூலில் இணைந்தது. அதேபோல் மேற்குவங்க காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் தேசியத் தலைமை மம்தாவதுக்கு ஆதரவு தெரிவிப்பதை விரும்பவில்லை. 

இப்படியாக, பாஜகவும் திரிணமூல் காங்கிரஸும் ஒருவொருக்கொருவர் மாறி மாறி தங்களை எதிர்த்து வருவதால் காங்கிரஸையும் இடதுசாரியையும் ஓரங்கட்டி வருகின்றனர். அதனால் சிபிஐ-க்கும் போலீஸுக்கும் இடையேயான இந்த விவகாரத்தில் திரிணமூலும் சரி பாஜகவும் சரி தங்களுக்கே வெற்றி என்று சொல்லிக் கொள்வது மிகச் சரியானதாகவே அமையும்.
 
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று (செவ்வாய்க்கிழமை) பேசும்போது, "மம்தா பானர்ஜி ஒரு சூப்பர் நாடக மாஸ்டர்" என விமர்சித்தார். அதற்கு பதிலளித்த மம்தா "எனது ஓவியங்கள் பற்றிகூட சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நான் ஒரு கலைஞர்" என்றார். நாடகமாக இருக்கட்டும் ஓவியமாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் மம்தா பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துக் கொண்டேதான் இருக்கிறார். 

- தமிழில்: பாரதி ஆனந்த்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close