[X] Close

விவசாயிகளுக்கு ஒருநாளுக்கு 17 ரூபாய் அறிவித்திருப்பது அவமதிப்பாகும்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


budget-2019-giving-rs-17-a-day-an-insult-to-farmers-says-rahul-gandhi

  • போத்திராஜ்
  • Posted: 01 Feb, 2019 16:33 pm
  • அ+ அ-

புதுடெல்லி பிடிஐ

இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நாள்ஒன்றுக்கு 17 ரூபாயை மத்திய அரசு அறிவித்து அவர்களை அவமானப்படுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது இடைக்கால மற்றும் கடைசி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களையும், விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினர், தொழில்துறையினர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் சலுகைகளை அறிவித்தார்.

இந்த பட்ஜெட்டில் முக்கியமாக விவசாயிகளுக்கு உதவித்தொகை அறிவிக்கப்பட்டது. 2 ஹெக்டேர் நிலத்துக்குக் குறைவாக வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை 3 தவணைகளாக வழங்கப்படும்.இது முற்றிலும் மத்திய அரசின் உதவித்தொகை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் திட்டத்தில் மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு அளிக்கும் தொகையை ஆண்டுக்குப் பிரித்துப்பார்த்தால், விவசாயி ஒருவருக்கு ரூ.16.44 காசுகள்தான் வருகிறது. இதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தத் திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், " அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, 5 ஆண்டுகளாக உங்களுடைய திறமையின்மை, அகங்காரம் ஆகியவற்றால் விவசாயிகள் வாழ்க்கையைச் சிதைத்துவிட்டீர்கள். இப்போது அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 17 ரூபாய் அளிப்பது அவமதிப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அகிர்ஜும்லாபட்ஜெட் என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் ட்விட்டரில் கூறுகையில், " 15 லட்சம் ரூபாய் தருவோம் என்று உறுதியளித்தார்கள். ஆனால், நிலம் வைத்துள்ள விவசாயிக்கு மாதம் 500 ரூபாய் தருகிறார்கள். பணமதிப்பிழப்பு என்ற அமல்படுத்தியது, வேளாண்மையில் எப்போதுமில்லாத சிக்கலை ஏற்படுத்தியது, ஜிஎஸ்டியை மோசமாக அமல்படுத்தியது ஆகிய குற்றங்களைச் செய்தமைக்கா, விவசாயிகளுக்கு 500 ரூபாய் வழங்கி இருப்பது மிகச்சிறிய அளவு.

நடுத்தர குடும்பத்தினரை மத்தியஅரசு ஏமாற்றிவிட்டது. அவர்களுக்கு பட்ஜெட்டில் ஒன்றும் செய்யவில்லை. பொருளாதார ரீதியாக பன்தங்கிய, ஆண்டுக்கு 8 லட்சம்ரூபாய்க்கு கீழ் வருமானம் ஈட்டியவர்களுக்காகச் செய்தோம் என்று கூறிவிட்டு, வரிச்சலுகை ஒன்றும் அறிவிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர் கூறுகையில், " இந்தபட்ஜெட் அதிருப்தியை அளிக்கிறது. வெற்று வாக்குறுதிகள் உண்மைக்கு ஆதரளிக்காது. நடுத்தர குடும்பத்தாருக்கு வரிச்சலுகையை வரவேற்கிறோம். ஆனால், பிரதமரின் கிஷான் யோஜனா திட்டத்தில் ஒன்றுமில்லை. கவர்ச்சித் திட்டமாகவே இருக்கிறது. மாதத்துக்கு 500 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்குவதால், யாருடைய வாழ்க்கையிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது" எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close