[X] Close

சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன விவகாரம்: விசாரணை அமர்விலிருந்து 3-வது நீதிபதி விலகல்


cbi-director

  • kamadenu
  • Posted: 01 Feb, 2019 06:24 am
  • அ+ அ-

சிபிஐ இயக்குநராக பதவி வகித்த அலோக் வர்மாவும் சிறப்பு இயக்குநராக பதவி வகித்த ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சப் புகார் கூறினர். இதையடுத்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்தது. இதை எதிர்த்து அலோக் வர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வர்மா இயக்குநர் பதவியில் தொடரலாம் என உத்தரவிட்டது.

இதையடுத்து, சிபிஐ இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்ற அலோக் வர்மாவை பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை தேர்வுக் குழு பதவி நீக்கம் செய்தது. இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடர்வார் என்றும் அக்குழு அறிவித்தது. இந்நிலையில், இதை எதிர்த்து ‘காமன் காஸ்’ என்ற தொண்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. நாகேஸ்வர ராவ் முறைப்படி நியமனம் செய்யப்படவில்லை என்பதால் இதை ரத்து செய்துவிட்டு, நிரந்தர இயக்குநரை முறைப்படி நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த மனுவை விசாரிக்கும் அமர்விலிருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகிய 2 பேர் ஏற்கெனவே விலகினர். இந்நிலையில் 3-வதாக நீதிபதி என்.வி.ரமணாவும் விசாரணை அமர்விலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நாகேஸ்வர ராவ் எனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர். மேலும் அவருடைய மகள் திருமணத்தில் நான் கலந்துகொண்டேன். எனவே, இந்த வழக்கின் விசாரணையிலிருந்து விலகுகிறேன். புதிய அமர்வு குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார்” என்றார்.

புதிய நீதிபதி

இதையடுத்து, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வில் நீதிபதி நவின் சின்ஹா இடம்பெற்றுள்ளார்.

பொதுநல மனு தள்ளுபடி

சிபிஐ சிறப்பு இயக்குநராக பதவி வகித்த ராகேஷ் அஸ்தானா விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் (பிசிஏஎஸ்) இயக்குநராக ஜனவரி 18-ம் தேதி நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், “அஸ்தானா மீதான லஞ்சப் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரை வேறு ஒரு உயர் பதவியில் நியமித்தது சட்டவிரோதம்” என கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த மனுவை தள்ளுபடி செய்வ தாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமைமையிலான அமர்வு நேற்று அறிவித்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close