[X] Close

சட்டத்தோடு விளையாட வேண்டாம்: கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்


dont-play-with-the-law-sc-warns-karthi-chidambaram

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 10:10 am
  • அ+ அ-

‘‘சட்டத்தோடு விளையாட வேண்டாம். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், நாங்கள் கடும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டியிருக்கும்’’ என்று கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்கு மத்திய வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் (எப்ஐபிபி) அனுமதி வழங்கி உள்ளது. அதற்கு பிரதிபலனாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு ரூ.305 கோடி முறைகேடாக பணம் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வெளிநாடு செல்ல நீதிமன்றம் அளித்த உத்தரவை கார்த்தி சிதம்பரம் தவறாகப் பயன்படுத்துவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்காமல், வழக்கை தாமதப்படுத்துவதாகவும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் மீதான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏர்செல் - மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைகளில் கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்காததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நீதிபதிகள் கூறும்போது, ‘‘சட்டத்தோடு விளையாட வேண்டாம். நீங்கள் (கார்த்தி சிதம்பரம்) சட்டத்தோடு விளையாடினால், கடவுள் மட்டும்தான் உங்களுக்கு உதவிசெய்ய வேண்டும். நாங்கள் கடும்உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டியிருக்கும். நாங்கள் சொல்வதற்கு நிறைய உள்ளன. இப்போதைக்கு அவை வேண்டாம். பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்று எச்சரித்தனர்.

எனினும், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடத்தும் ஏடிபிமற்றும் டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டிகளுக்கு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், ரூ.10 கோடிக்கான பிணைத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். மேலும்,வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப வருவேன், விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்றஉறுதிமொழியை எழுத்துப்பூர்வமாக கார்த்தி சிதம்பரம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘‘பிப்ரவரி 10-ம் தேதி முதல்26-ம் தேதி வரை எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால், விசாரணைக்கு கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும். மார்ச் 5, 6, 7 மற்றும் 12-ம் தேதிகளில் அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close