[X] Close

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது; இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்: சலுகைகள் அறிவிக்க வாய்ப்பு


parliament-budget

நாடாளுமன்றம் | கோப்புப் படம்: எஸ். சுப்பிரமணியம்

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 09:42 am
  • அ+ அ-

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் வரும் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதி அமைச்சகர் பியூஷ் கோயல் நாளை தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தல் வருவதால் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். இதையடுத்து, 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் நாளை தாக்கல்செய்கிறார். பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கும். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருப்பதால், அவர் கவனித்து வந்த நிதியமைச்சக பொறுப்பு கடந்த வாரம் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று வாட்ஸ்அப் மூலம் வெளியிட்ட அறிக்கையில், “2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் என குறிப்பிட முடியாது, இது பொது பட்ஜெட் என்று அழைக்கப்படும்” என கூறப்பட்டிருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. முழு பட்ஜெட்தாக்கல் செய்தால் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்துவோம் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்நிலையில், இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்தான் என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் வரும் நிதியாண்டுக்கு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

புதிதாக பொறுப்பேற்கும் அரசுதான் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிகிறது. கடைசி கூட்டத்தொடர் என்பதால், முத்தலாக் தடைமசோதா, குடியுரிமை திருத்த மசோதா உட்பட் நிலுவையில் உள்ள சில மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகளை அறிவித்தால் அதை எதிர்க்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close