[X] Close

சபரிமலைக்குச் சென்ற பிந்து, கனகதுர்கா: பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு- நாளை விசாரணை


bindhu-kanagadurga-who-entered-sabarimala-seeks-protection

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 17 Jan, 2019 16:26 pm
  • அ+ அ-

முதன்முதலாக சபரிமலைக்குச் சென்ற 50 வயதுக்கு உட்பட்ட பெண்களான பிந்து, கனகதுர்கா இருவரும், தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

சபரிமலையில் அனைத்துப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி, கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி பிந்து, கனகதுர்கா ஆகிய இருபெண்கள் சபரிமலைக்குச் சென்றபோது பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பினார்கள். இந்த இரு பெண்களும் கடந்த 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இவர்கள் இருவரும் கோயிலுக்குச் சென்று திரும்பியுடன் கோயில் தந்திரி கோயில் நடையைச் சாத்தினார். அதன்பின் தூய்மைப் பரிகாரப் பூஜைகள் செய்த பின் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது.

இதில் மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா, சிவில் சப்ளை துறையில் பணியாற்றி வருகிறார். இந்து அமைப்புகள் எதிர்ப்பு, வலது சாரி அமைப்புகளின் போராட்டம் ஆகியவற்றால், கடந்த இரு வாரங்களாக போலீஸார் பாதுகாப்பில் மறைவிடத்தில் கனகதுர்கா தங்கி இருந்தார்.

இந்நிலையில், கனகதுர்கா தனது வீட்டுக்குச் சென்றபோது, வீட்டில் இருந்த கனகதுர்காவின் மாமியாருக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றது குறித்து கனகதுர்காவைக் கண்டித்த அவரின் மாமியார் அவர் மீது தாக்குதல் நடத்தினார்.

இந்நிலையில் தங்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று பிந்து, கனகதுர்கா ஆகிய இருவரும், உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில், ''அரசு எங்கள் இருவருக்கும் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். சபரிமலை கோயிலுக்குள் நுழைந்ததால், போராட்டக்காரர்கள் எங்கள் மீது வன்முறைகளை ஏவுகின்றனர். சமூக வலைதளங்களில் உடல் மற்றும் வாய்மொழியில் வசைபாடுகின்றனர். மற்ற வகைகளிலும் எங்களை அச்சுறுத்துகின்றனர்.

அவர்களிடம் இருந்து எங்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அனைத்து வயதுப் பெண்களும்  எவ்விதமான தடையோ இடையூறுகளோ இல்லாமல், சபரிமலை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

பெண்கள் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்த பிறகு கோயில் நிர்வாகிகள் கோயிலைப் புனிதப்படுத்தும் சடங்குகளை மேற்கொள்ளக்கூடாது. அதேபோல 10 முதல் 50 வயதிலான பெண்கள் நுழைந்தால் தீட்டு ஏற்பட்டதாகக் கூறி, கோயிலை மூடக் கூடாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் பிந்து மற்றும் கனகதுர்காவுக்காக இன்று (ஜன. 17 )  உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்விடம், அவசர வழக்காக இதை விசாரிக்குமாறு கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அமர்வு மனு நாளை (ஜன.18) விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close