[X] Close

சபரிமலையில் மீண்டும் பதற்றம்: ஐயப்பன் கோயிலுக்கு வந்த இரு இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்


tension-on-sabarimala-trekking-path-as-protesters-block-two-women-near-neelimala

  • போத்திராஜ்
  • Posted: 16 Jan, 2019 09:44 am
  • அ+ அ-

 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய இன்று அதிகாலை இரு பெண்கள் வந்தனர். அப்போது அவர்களை போராட்டக்கார்கள் நீலிமலையில் தடுத்து நிறுத்தியதால், பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அனைத்து வயத்துப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சபரிமலையில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். .

இந்நிலையில், 21 நாள் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புக்கு இடையே கடந்த டிசம்பர் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இம்மாதம் 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இதையொட்டி, கேரள மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து முடிந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை இரு இளம் பெண்கள் சபரிமலைக்கு ஐயப்பனைத் தரிசனம் செய்ய வந்துள்ளனர். அவர்களை நீலிமலையில் உள்ள தண்ணீர் தொட்டிபகுதியை கடக்கும் போது பக்தர்கள் பார்த்துவிட்டதால், அங்கு நாமகோஷத்தை எழுப்பி பெண்களை மலை ஏறமுடியாதபடி போராட்டம் நடத்தினார்கள்.

இதனால், பெரும் பதற்றம் ஏற்பட்டு அங்கு போலீஸார் விரைந்தனர். அங்கு நின்றிருந்த இரு பெண்களையும் போலீஸார் விசாரணை செய்தனர். அதில், ஒருவர் பெயர் ரீமா நிஷாந்த், மற்றொருவர் பெயர் ஷானிலா ராஜேஷ் என்பதும், இருவரும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இரு பெண்களும் கடந்த 103 நாட்களாக விரதம் இருந்து இருமுடி கட்டி வந்துள்ளதாகத் தெரிவித்தபோதிலும், அவர்களை மலை ஏறவிடாமல் போராட்டக்காரர்கள் தடுத்தனர்.

ஆனால், அந்த பெண்கள் இருவரும் தாங்கள் சபரிமலையில் ஐயப்பனைத் தரிசிக்க செல்ல போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால், 5 பேரை போலீஸார் கைது செய்ததால், பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, ரீமா நிஷாந்த், ஷானிலா ராஜேஷ் ஆகிய இரு பெண்களையும்,அவர்களுடன் வந்த 6 ஆண் பக்தர்களையும் போலீஸார் கட்டுப்பாட்டு அறைக்குப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீஸ் வாகனத்தின் மீது கல்வீசி எறிந்ததால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close