[X] Close

20 பயனாளிகளுக்கு வீடு கட்டிக்கொள்ள சொந்த இடத்தை தானமாக அளித்த அரசியல் பிரமுகர்


a-political-figure-who-donated-own-space-to-house-20-beneficiaries

பிரதிநிதித்துவப் படம்

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 18:09 pm
  • அ+ அ-

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு காங்கிரஸ் பிரமுகர் திருவனந்தபுரத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள தன் சொந்த ஊரில் வீடற்றவர்களுக்கு ஒரு தன்னிறைவுடைய குடியிருப்பு வசதிகளை உருவாக்கித் தர முனைந்துள்ளார். 

தனது மூதாதையரின் நிலமான 1 ஏக்கர் 10 சென்ட் நிலத்தை (4,451 சதுர அடி) பிரித்து 20 பயனாளிகளுக்கு அளித்துள்ளார். இன்று இதன் சந்தை மதிப்பு ரூ.8 கோடியாகும். சர்வதேச அளவில் சொல்ல வேண்டுமென்றால் 1.1 மில்லியன் அமெரிக்க டாலராகும்.

42 வயதேயான நியாஸ் சிதாரா இப்படி செய்தது எல்லாம் தனது காந்திகிராம கனவுகளை நிறைவேற்றுவதற்காகவே என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற அதற்கு நம்மாலான உதவிகள் செய்ய வேண்டும். நல்லெண்ணமும் கருணையும் கொண்டவர்களும் நம்மோடுதான் இருக்கிறார்கள் என்பதை நம்புபவர் நீங்கள் என்றால் நிச்சயம் நியாஸ் சிதாராவின் செயல்கள் எளிதாகப் புரிந்துவிடும்.

இதுகுறித்து ஐஏஎன்எஸ்ஸூக்கு நியாஸ் சிதாரா தெரிவித்த விவரம் வருமாறு:

''ஒரு மூதாட்டி மூடக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையோடு காத்திருந்ததைப் பார்க்கவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னவென்று விசாரித்தால், இக்குழந்தையின் தாய் இவனைக் கைவிட்டுவிட்டார்களாம். தந்தையோ விபத்து ஏற்பட்டு படுத்த படுக்கையாக கிடக்கிறாராம். அந்த கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏழைகள் வீடில்லாதவர்களுக்கு என்று ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுப் போக வந்ததாக அந்த மூதாட்டி கூறினார்.

வீடு திரும்பிய பிறகு ஏதோ ஒரு வலி என்னை வாட்டிக்கொண்டேயிருந்தது. அந்தக் குழந்தையின் முகம் கண்ணில் தெரிந்து கொண்டேயிருந்தது. அப்போது காந்தி சொன்ன 'இந்த உலகின் நிலையைப் பார்க்கும் நீதான் அதை மாற்றியாக வேண்டும்' என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

கடையர்களுக்கு கடைத்தேற்றம் செய்யவேண்டுமென்ற எனது விருப்பத்தை நிறைவேற்றி அவ்வழியில் தொடர்ந்து செயல்பட அதிகம் நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று நான் நினைத்தேன். சிதாரா கிராமப் பஞ்சாயத்தில் எனது மூதாதையரின் 110 சென்ட் நிலம் உள்ளது. அதனை உடனே நிலமற்றவர்களுக்கு அளிப்பதற்கான எனது பணிகளைத் தொடங்கினேன்'' என்றார் நியாஸ்.

நியாஸ் சிதாரா தனது திட்டத்தை நிறைவேற்றுவற்காக செய்த முறை மிகவும் வித்தியாசமானது. தனது கிராமத்தின் அருகிலுள்ள இரு கிராமங்களையும் இதில் இணைத்துக்கொண்டு அதில் வீடற்றவர்களாக உள்ள பலருக்கும் அஞ்சல் அட்டையில் தொடர்பு கொண்டார். அதில் 300 குடும்பங்கள் பதிலளித்தன. அவர்களை ஒரு அரங்கத்திற்கு அழைத்து அவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்துப் பேசினார். சாதி, சமயம், சமுதாயம், மதம் என்று எல்லாவற்றையும் கடந்து அதில் 19 பயனாளிகளை மட்டும் தேர்ந்தெடுத்தார். இதில் ஆதரவற்ற அக்குழந்தையை 20-வது பயனாளியாக சேர்த்துக்கொண்டார். 20 பயனாளிகளுக்கும் நிலத்தைப் பதிவு செய்து அளித்தார்.

இந்நிலத்தை பதிவு செய்வதற்கு முன்பு அவர் அளித்த நிபந்தனைகள் இதில் முக்கியமானவை. இந்தப் பயனாளிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த ஒரு அரசுத் திட்டத்திலும் (இலவச பசுமை வீடு போன்ற) பயன்பெற்றிருக்கக் கூடாது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்நிலத்தை விற்கவோ அல்லது வேறொரு பெயருக்கு மாற்றவோ கூடாது.

''மனநலம் பாதிக்கப்பட்ட அச்சிறுவனுக்கு மட்டும் நானே முன்னின்று வீடு கட்டித் தரலாம் என்று இருக்கிறேன். உதவிக்கு மக்களின் கரங்களையும் துணைக்கழைத்துக் கொள்ள உத்தேசம்.'' என்று புன்னகையோடு தெரிவிக்கிறார் நியாஸ்.

அடுத்த வாரம் நடைபெற்ற உள்ள ஒரு நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவை வரவழைத்து அவர் மூலமாகவே 20 பயனாளிகளுக்கும் அதிகாரபூர்வமாக நிலத்தை வழங்க உள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் சிறுவன் வீட்டுக்காக உதவிக்கரம் நீட்டி முதல் தவணையை வழங்கியுள்ளார்.

சிதாரா, தான் இலவசமாக அளிக்கப்போகும் மக்களுக்கான இவ்வீட்டு மனைகள் அருகே தனது சொந்த செலவில் ரூ.5 லட்சத்தில் ஒரு குளத்தையும் வெட்டிக் கொடுத்திருக்கிறார். அவரது உதவிகள் இதோடு நிற்கப்போவதில்லை. இந்த காந்தி கிராமத்தில் ஒரு நூலகம் அமைக்கப்படுமாம்.

பெண்கள் சொந்தத் தொழில் தொடங்க ஒரு இடம், குழந்தைகளுக்காக ஒரு அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளும் கொண்ட ஒரு சிறிய சமுதாயத்தை காந்தி பெயரில் உருவாக்கப் போகும் நியாஸ் சிதாராவின் செயல் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close