[X] Close

மனோகர் பாரிக்கர் படுக்கை அறையில் ரஃபேல் ஆவணங்களா? பிரதமர் மோடி விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்


congress-demands-answers-from-pm-on-parrikar-s-purported-claim-on-rafale-files

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இன்று பேட்டி அளித்த காட்சி

  • போத்திராஜ்
  • Posted: 02 Jan, 2019 15:06 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் படுக்கை அறையில் ரஃபேர் போர் விமான கொள்முதல் குறித்த ஆவணங்கள் இருப்பதாகக் கோவா அமைச்சர் ஒருவர் பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோவா மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. அப்போது, முதல்வர் மனோகர் பாரிக்கர் அமைச்சர்களிடம் பேசுகையில், “ ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த அனைத்து ஆவணங்களும் என்வீட்டுப் படுக்கை அறையில் இருக்கிறது” என்று தெரிவித்ததாக கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே பேசிய ஆடியோ வெளியானது.

ஆனால், இந்த ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்தோ, அந்த ஆடியோவில் பேசியது உண்மையிலேயே கோவா அமைச்சர் ராணேவா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இந்த ஆடியோவை காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களைச் சந்தித்தபோது வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

கோவா அமைச்சர் விஸ்வஜித் ராணே, மற்றொருவரிடம் கூறும் ஆடியோ டேப் என்னிடம் இருக்கிறது. அதில் சமீபத்தில் கோவாவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மனோகர் பாரிக்கர், ராணேவிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் என்னையாரும் நீக்க முடியாது, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த அனைத்து ஆவணங்களும் என் வீட்டு படுக்கை அறையில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளதாக ராணே பேசவது அதில் இருக்கிறது.

முதல்வர் மனோகர் பாரிக்கர் மிகவும் சுவாரஸ்யமான தகவலைத் தெரிவித்துள்ளார். தன்னுடைய படுக்கையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ரஃபேல் விவகாரத்தில் பாஜக தொடர்ந்து பொய்களையே கூறி வருகிறது என்பது இப்போது உண்மையாகியுள்ளது. காவலாளி திருடர் என்பது தெளிவாகிவிட்டது

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். மனோகர் பாரிக்கர் படுக்கை அறையிலும், வீட்டிலும் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த ரகசியங்கள் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு இந்தத் தேசம் பதில் கேட்கிறது. ஏன் காவலாளி(பிரதமர் மோடி) பாரிக்கருக்கு பயப்படுகிறார்.

இப்போது பிரதமர் மோடி கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அவரின் திட்டமிட்ட நேர்காணல்கள் அனைத்தும் ஊடகங்கள் கேட்டும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப் பயன்படாது. ரஃபேல் ஆவணங்களை வெளிப்படையாகக் காட்டுவதில் என்ன உறுத்தல் இருக்கிறது. ரஃபேல் ஒப்பந்தத்தின் அத்துனை விஷயங்களும் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.

காவலாளி ரகசியங்களை மோசமாகப் பாதுகாக்கிறார் என்பதற்கு புதிய ஆதாரங்கள் வருகின்றன. மோடி அரசு எதை மறைக்க முயல்கிறது. நாடாளுமன்றக் கூட்டுக்குழுக்கூட்டத்துக்கு ஏன் உத்தரவிட மறுக்கிறது.

நான் பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் தவறுகளும், ஊழலும் இருக்கின்றன என்பது ஆவணங்களில் இருக்கிறது. அந்த ஆவணங்கள் பாரிக்கரிடம் இருக்கின்றன.

ஏன் அவர்கள் அதை மறைக்கிறார்கள். மோடி எதையும் மறைக்கவில்லை என்றால், பாரிக்கர் ஏன் தனது படுக்கை அறையில் ரஃபேல் ஆவணங்களை மறைக்க வேண்டும். அனைவரையும் மிரட்ட வேண்டும், யாரும் எனக்கு எதிராகச் செயல்பட முடியாது என்று கூறுகிறார்.

ஏனென்றால், அனைத்து ரகசியங்களும் அந்த ஆவணங்களில் இருக்கிறது. அந்த ஆவணங்கள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்

இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close