[X] Close

அய்யோ ராமா, என்னை யார் ஞாபகம் வைத்திருக்கா?- தேவகவுடா வேதனை


deve-gowda-on-being-left-out-of-bogibeel-bridge-inaugural

எச்.டி. தேவே கவுடா

  • போத்திராஜ்
  • Posted: 26 Dec, 2018 11:13 am
  • அ+ அ-

பெங்களூரு, பிடிஐ

அசாமில் நேற்று தொடங்கிவைக்கப்பட்ட போகிபீல் ரயில் பாலத் திறப்புவிழாவுக்கு என்னை அழைக்கவில்லை, இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதே நான்தான் என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா தெரிவித்தார்.

.அசாமின் கிழக்குப் பகுதி மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் 94 கி.மீ. நீளம் கொண்ட போகிபீல் பாலம், அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய பாலமான போகிபீல் மேலே மூன்று வழிச் சாலையும் கீழே இரண்டு வழி ரயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன.

1997-ல் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்ட போகிபீல் பாலம், 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு முறை காலக்கெடுக்களைக் கடந்த பாலம், கடந்த டிசம்பர் 3-ம் தேதி முதன்முதலாக ரயில் போக்குவரத்து வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்தார். இந்தப் பாலத்தின் திட்டமதிப்பு ரூ.5,900 கோடியாகும்.

ஆனால், இந்தப் பாலத்தின் திறப்பு விழாவுக்கு, அடிக்கல் நாட்டிய முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை.இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதில்:

காஷ்மீருக்கு ரயில்பாதை, டெல்லிமெட்ரோ ரயில், அசாம் போகிபீல் ரயில்,சாலைப் பாலம் ஆகிய திட்டங்களுக்கு என்னுடைய ஆட்சிக்காலத்தில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நான்தான் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி முதல்கட்ட நிதியை ஒதுக்கினேன். இந்தத் திட்டங்களுக்கு முதல்கட்டமாக தலா ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்தேன். இதுமட்டுமல்ல இன்னும் ஏராளமான திட்டங்களுக்கு அனுமதி அளித்தேன். ஆனால், இந்தத் திட்டங்கள் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன, ஆனால், மக்கள் என்னை மறந்துவிட்டார்கள் என்றார்.

இந்த விழாவுக்கு உங்களுக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், “ அய்யோ ராமா, யார் என்னை நினைவு வைத்திருக்கிறார்கள்? சில நாளேடுகள் மட்டும் என்னை இந்தப் பாலம் குறித்து எழுதும்போது குறிப்பிடுகிறார்கள் அவ்வளவுதான்.

திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல்வேறு காலதாமதங்கள் ஏற்படுகின்றன. இந்த விஷயத்தில் நான் மற்ற அரசுகளில் இருந்து வேறுபடுகிறேன். நான் 13 மாதங்களில் ஹசன்-மைசூரூ திட்டத்தை முடித்துக்கொடுத்தேன். ஒரேநேரத்தில் இரு பாலத்தை கட்டமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தேன். கிருஷ்ணா நதிக்குக் குறுக்கே செல்லும் பாலம் என்னுடைய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. மும்பை, கர்நாடக மண்டலத்தில் உள்ள மக்கள் தேவேகவுடா எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். அங்கே சென்று பார்த்தால் என்னுடைய பணிகளைப் பற்றித் தெரியும்” எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close