[X] Close

கோயில் சொத்துக்கு ஆசைப்பட்டு 16 பக்தர்களை விஷம் வைத்து கொன்ற பூசாரி: கர்நாடகா சம்பவ பின்னணியில் தமிழக குற்றவாளிகள்


kovil-murder

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை. | பிடிஐ.

  • kamadenu
  • Posted: 22 Dec, 2018 09:27 am
  • அ+ அ-

இரா.வினோத்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுல்வாடி கிராமத்தில் கிச்சுகட்டி மாரம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இது தவிர கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து கணிசமான அளவில் வருமானம் கிடைக்கிறது. எனவே கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையை கைப்பற்ற தலைவர் சின்னப்பி என்பவருக்கும், மேலாளர் மாதேஷாவுக்கும் இடையே நீண்ட காலமாக போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் ரூ.1.5 கோடி செலவில் கோபுரம் அமைக்கும் பணி கடந்த 15-ம் தேதி தொடங்கியது. அப்போது வழங்கப்பட்ட பிரசாதத்தை (தக்காளி சாதம்) சாப்பிட்ட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அடுத்தடுத்த நாட்களில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சாம்ராஜ்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் சின்னப்பி, அவரது மகன் லோகேஷ், மேலாளர் மாதேஷா, சமையலர் புட்டசாமி உள்ளிட்ட 7 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது கோயில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கர்நாடக தெற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சரத் சந்திரா கூறுகையில் , ‘’ கோயில் நிர்வாகத்தை கைப்பற்ற, இரு தரப்புக்கு இடையே நடந்த போட்டிதான் இந்த சம்பவத்துக்கு காரணம். கோயில் மேலாளர் மாதேஷாவின் மனைவி அம்பிகா (35) என்பவர்தான் முதலில் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸாருக்கு தகவல் தருவதற்கு முன்பாக சாளூர் மடத்தின் இளைய மடாதிபதியும், மாரம்மா கோயில் பூசாரியுமான‌ இம்மடி மகாதேவசாமிக்கு தகவல் கொடுத்திருப்பது அவரது தொலைபேசியை ஆராய்ந்தபோது தெரிய வந்தது. பின்னர் அவரிடம் விசாரித்தபோது இம்மடி மகாதேவசாமிக்கும் தனக்கும் தகாத தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டார்.

இம்மடி மகாதேவசாமி, கோயில் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காகவும், தற்போதைய நிர்வாக குழு தலைவர் சின்னப்பி தரப்புக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவும் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்க திட்டமிட்டதாக தெரிவித்தார். மேலும் அம்பிகாவுக்கு மாரம்மா கோயில் நிர்வாகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்க இம்மடி மகாதேவசாமி முடிவெடுத்ததாக கூறியுள்ளார்.  அம்பிகா வேளாண் துறையில் பணியாற்றும் தன் உறவினர் மூலம் 500 மி.லி. பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கியுள்ளார்.  கடந்த 15-ம் தேதி கோயில் கோபுரம் கட்டுவதற்கான பூமி பூஜையின்போது அம்பிகா, மாதேஷ், மேட்டூரைச் சேர்ந்த மற்றொரு பூசாரி தொட்டய்யா ஆகியோர் பிரசாதத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்துள்ளனர். 

காட்டிக்கொடுத்த செல்போன்

பூச்சிக்கொல்லி மருந்து கலந்த பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கத்துக்கு ஆளாகி உயிரிழந்தனர். இதனை அறிந்த அம்பிகா போலீஸாருக்கு தகவல் கொடுத்த போது, ‘’இந்த சம்பவத்துக்கு காரணம் சின்னப்பி தரப்புதான். பிரசாதத்தில் விஷம் கலந்து விட்டார்கள்’’ என குற்றம்

சாட்டினார். அடுத்தடுத்து இம்மடி மகாதேவசுவாமி, மாதேஷா, தொட்டய்யா ஆகிய மூவருடனும் நீண்ட நேரம் பேசியுள்ளார். அவரது செல்போனை ஆராய்ந்த போது இந்த தகவல்கள் கிடைத்தன. அதுகுறித்து நால்வரிடமும் நடந்த விசாரணை அடிப்படையில் நான்கு பேரையும் கைது செய்தோம்’’ என்றார்.

இவ்வழக்கில் கைதாகியுள்ள 7 பேரில் தொட்டய்யா, மாதேஷா உள்ளிட்ட நால்வர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதனால் கர்நாடக‌ போலீஸார் கோயமுத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close