[X] Close

மோடியை விமர்சித்த மன்மோகன் சிங்: பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர்


naqvi-slams-ex-pm-manmohan-singh

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Dec, 2018 12:53 pm
  • அ+ அ-

"நான் ஒருபோதும் பத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்து செல்லும் பிரதமராக இருந்தது இல்லை. நான் பத்திரிகையாளர்களை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து சந்தித்து பேட்டி கொடுத்து வந்தேன்" என்று பிரதமர் மோடியை விமர்சித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி.

இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "மன்மோகன் சிங் எப்போதும் அவருக்கு என்ன சொல்லப்படுகிறதோ அதையே பேசுவார். இப்போதும் அதைத்தான் செய்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்.

ஆனால் பிரதமராக இருந்தபோது அவர் இதைத்தான் பேச வேண்டும் என்று மேலிட கட்டளை வரும். எழுதிகொடுக்கப்பட்ட ஸ்க்ரிப்டையே பேசுவார். இப்போதும் அப்படித்தான் பேசுகிறார். பிரதமர் மோடிக்கு அப்படி யாரும் என்ன பேச வேண்டும் என்று எடுத்துரைக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.

ராகுலுக்கும் விளாசல்..
தொடர்ந்து பேசிய அவர், ராகுல் காந்திக்கு திடீரென விவசாயிகள் மீது பாசமும் பற்றும் வந்துவிட்டது என்று விமர்சித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு என்ன நடந்தது என்ற வரலாற்றை இப்போது அவரை இயக்குபவர்களிடம் ராகுல் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது என்றும் வசை பாடினார்.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் விவசாயக் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close