[X] Close

2000, 500 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு அச்சடித்தீர்கள்? - விவரங்களை வெளியிட ரிச்ர்வ் வங்கிக்கு சிஐசி உத்தரவு


data-on-printing-of-rs-2000-and-rs-500-post-demonetisation-should-be-disclosed-cic

  • போத்திராஜ்
  • Posted: 17 Dec, 2018 16:57 pm
  • அ+ அ-

புதுடெல்லி, பிடிஐ

2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டில் கொண்டுவரப்பட்டபின் 2000, 500 நோட்டுகள் எவ்வளவு அச்சடிக்கப்பட்டன என்கிற விவரங்களை வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம்(சிஐசி) உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான தி பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன்(பிரைவேட்லிமிட்) என்ற நிறுவனம்தான் 2000, 500 நோட்டுகள் அனைத்தையும் அச்சடித்தது. ஆனால், தற்போது அச்சடிக்கப்பட்ட விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.

நாட்டில் கறுப்புப்பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு், நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி, நாட்டில் புழக்கத்தில் இருந்த 86 சதவீதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதற்குப் பதிலாக ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், ஏடிஎம்களில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை வைப்பதற்கு மாற்றம் செய்யதாமதம் ஏற்பட்டதையடுத்து, மக்கள் பணம் கிடைக்காமல் கடும்சிரமத்துக்கு உள்ளாகினார்கள்.

இந்நிலையில், சமூக ஆர்வலர் ஹரிந்தர் திங்ரா என்பவர், தகவல் அறியும் மனுவின் மூலம், ரிசர்வ் வங்கியிடம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நவம்பர் 9-ம் தேதி முதல் 30-ம் தேதி வரைஅச்சடிக்கப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகள் விவரங்களைக் கேட்டிருந்தார். எவ்வளவு நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன, அதன் மதிப்பு, அச்சடிக்க ஆகிய செலவு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கேட்டிருந்தார். ஆனால், ரிசர்வ் வங்கி அளித்த விவரங்கள் மனநிறைவை அளிக்கவில்லை.

இதையடுத்து, மத்திய தலைமை தகவல் ஆணையர் சுதிர் பார்கவாவிடம் ஹரிந்தர் திங்ரா மேல்முறையீடு செய்தார். இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு நோட்டிஸ் ஆனுப்பி பதில் அளிக்க ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், “ ரூபாய் நோட்டு அச்சிடுதலும், அது தொடர்பான நடவடிக்கைகளும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படக்கூடியவை, ரகசியம் காக்கப்படக்கூடியவை. ரூபாய் நோட்டு அச்சடிக்க மூலப்பொருட்கள் எங்கிருந்து வருகிறது, போக்குவரத்து தொடர்பான விஷயங்கள், இருப்பு, அச்சடித்தல் உள்ளிட்ட எந்த விவரங்களையும் பொதுப்படையாக வெளியிட முடியாது. அவ்வாறு பொதுப்படையாக வெளியிடுவது கள்ளநோட்டுபுழக்கத்தை அதிகப்படுத்திவிடும், பொருளாதார குழப்பத்தை ஏற்படுத்தும்

மேலும், 2016-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டின் விவரங்களை அளிப்பது என்பது நாட்டின் இறையாண்மை, நம்பக்கத்தன்மை, பொருளாதார நலன்கள் ஆகியவற்றுக்கு விரோதமானதாகும். இந்த விவரங்கள் வெளியிடுவது என்பது, ஆர்டிஐ சட்டம் பிரிவு 8(1)விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது “ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த விளக்கத்தை மத்திய தகவல் ஆணையர் பார்கவா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அவர் பிறப்பித்த உத்தரவில், “ பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் 2000, 500 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு அச்சடிக்கப்பட்ட என்ற விவரங்களை வெளியிடுவதில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படாது என்று நினைக்கிறோம். அதனால் பாதிப்பும் ஏற்படாது. ஆர்டிஐ சட்டத்தில் விலக்க வரம்புக்குள்ளும் இந்த விஷயங்கள் வராது.

ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட விவரங்கள், போக்குவரத்து செலவுகள், மூலப்பொருட்கள், இருப்பு வைத்தல் உள்ளிட்ட விவரங்களை வெளியிடுவதால் பாதகமான விளைவுகளும் ஏற்படும் எனக் கருதமுடியாது. ஆதலால், மனுதாரர் கேட்டுள்ள அனைத்துவிவரங்களையும் வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close