[X] Close

'2-வது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்குப் பேரழிவு, ஜனநாயகம் இருக்காது': யஷ்வந்த் சின்ஹா தாக்கு


yashwanth-sinha

  • kamadenu
  • Posted: 12 Dec, 2018 17:01 pm
  • அ+ அ-

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், அது மக்களுக்குப் பேரழிவு, நாட்டில் ஜனநாயகம் இருக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான யஷ்வந்த் சின்ஹா, பிடிஐ செய்திநிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்கி, பாஜக எதிர்த்துப் போட்டியிட வேண்டும். அப்போதுதான் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் பெற முடியும்.

மாநிலங்களில் உள்ள பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாகச் சென்று, இந்தக் கூட்டணியை உருவாக்க வேண்டும். ஆனால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியாக இருத்தல் அவசியம்.

எனக்குத் தெரிந்தவரை பிராந்தியக் கட்சிகளுக்கு இடையே எந்தவிதமான கருத்துவேற்றுமையும் இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேசத்துக்கும், அல்லது திமுகவுக்கும் இடையே எவ்விதமான முரண்பாடும் இருக்காது.

 ஆதலால், பிராந்தியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து போட்டியிடும் போது, பாஜகவைக் காட்டிலும் அதிகமான இடங்களை பெற வாய்ப்புள்ளது. பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாகச் சென்று, தேர்தலுக்குப்பின் ஒன்றாகச் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம். மக்களவைத் தேர்தலுக்கு பின்பே எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவர் யார் என்றும் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கூறுகையில்,  " மோடியின் ஏற்றுக்கொள்ளமுடியாத மாயாஜால கோட்பாட்டை தேர்தல் முடிவுகள் அழித்திருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் சேர வழிவகுத்து இருக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைக்க வேண்டும் என்று நான் கூறுவதற்கு காரணம் இருக்கிறது. ஒருவேளை மக்களவைத் தேர்தலில் 150 இடங்களை பாஜக பெற்றுவிட்டால், ஆட்சி அமைக்கக் குடியரசு தலைவர் தனிப்பெரும்பான்மை உள்ள கட்சியை அழைப்பார். ஆனால், காங்கிரஸ் மற்றும் பிராந்தியக் கட்சிகள் ஒன்று சேராமல் தனித்தனியாக பாஜகவைக் காட்டிலும் அதிகமான இடங்கள் பெற்றிருந்தாலும் அவர்களை அழைக்கமாட்டார்கள்.

ஆனால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலைச் சந்தித்து, அதிகமான இடங்களைப் பெற்றிருந்தால், எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கட்சியாக அங்கீகாரம் செய்து ஆட்சி அமைக்க அழைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆதலால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை வலுவாக அமைக்க வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி  தலைமையிலான ஆட்சி குறித்து என்னிடம் கேட்டால், "பிரதமர் மோடி தலைமையில் 2-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தால், அது மக்களுக்குப் பேரழிவாகும், நாட்டில் எங்கும் ஜனநாயகம் இருக்காது. ராமர் கோயில் விவகாரத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது".

இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close