சிவில் நீதிபதிக்கான தேர்வு: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு: நீதித்துறைப் பணியில் சேர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், இந்த உத்தரவு நடந்து கொண்டிருக்கும் நீதித்துறை ஆட்சேர்ப்புக்கு பொருந்தாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
டெல்லி எம்எல்ஏக்களுக்கான உள்ளூர் மேம்பாட்டு நிதி குறைப்பு: பாஜக தலைமையிலான டெல்லி அரசு, ஆண்டுதோறும் எம்எல்ஏக்களுக்கு வழங்கும் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை ரூ.15 கோடியிலிருந்து ரூ.5 கோடியாகக் குறைத்துள்ளது. டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.5 கோடி என ரூ.350 கோடியை அரசாங்கம் ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்: ட்ரம்ப்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பொற்கோயிலில் வான்பாதுகாப்பு அமைப்பை நிறுவ அனுமதி: பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்வதற்காக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலின் புனித வளாகத்தினுள் வான்பாதுகாப்பு அமைப்பினை நிறுவ கோயிலின் தலைமை கிராந்தி சிறப்பு அனுமதி வழங்கியுள்ளதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் அமலாக்கத் துறை அதிகாரி உட்பட 4 பேர் மீது வழக்கு: கேரள தொழிலதிபரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரி உட்பட நான்கு பேர் மீது விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘பாஜகவால் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் அமலாக்கத் துறை இயக்குநரகம் இப்போது ஒரு பெரிய ஊழலின் மையத்தில் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.