ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் மவுனம் கலைய வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்


புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் விவ​காரத்​தில் மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கரின் மவுனம் கலைய வேண்​டும் என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி வலி​யுறுத்​தி​ உள்​ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்​தி​யாளர்​களிடம் பேசிய மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர், தாக்​குதல் தொடங்​கியதும் பாகிஸ்​தானுக்கு அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​டது என்று கூறி​யிருந்​தார். மத்​திய அமைச்​சரின் இந்த கருத்து பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இதுதொடர்​பாக அப்​போது கேள்வி எழுப்​பிய மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, பாகிஸ்​தானிடம் ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதல் தொடர்​பாக தெரி​விப்​ப​தற்கு மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கருக்கு அனு​மதி அளித்​தது யார் என்​றார்.

மேலும், அந்​தப் பதி​வில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பாக பாகிஸ்​தானுக்கு அதி​காரப்​பூர்​வ​மான தகவல் அளித்​த​தாக மத்​திய அரசு வெளிப்​படை​யாக ஒப்​புக்​கொள்​கிறது. அப்​படி என்​றால் இந்த தாக்​குதலில் நாம் எத்​தனை போர் விமானங்​களை இழந்​தோம் என்ற விவரத்தை மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கர் வெளி​யிட வேண்​டும். இவ்​வாறு ராகுல் காந்தி கூறி​யிருந்​தார்.

ராகுலின் இந்​தக் கேள்விக்கு மத்​திய அரசு பதிலளிக்​காத நிலை​யில், மீண்​டும் ராகுல் காந்தி எக்ஸ் தளத்​தில் பதிவு ஒன்றை நேற்று வெளி​யிட்​டார். அதில், “மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சரின் ஜெய்​சங்​கரின் மவுனம் வெறும் வார்த்தை மட்​டுமல்ல, நம் அனை​வருக்​கும் அது வேதனை அளிக்​கிறது. ஆகை​யால் மீண்​டும் அவரிடம் கேட்​கிறேன்.

பாகிஸ்​தானுக்கு தாக்​குதல் தொடர்​பாக முன்​கூட்​டியே தெரிந்​திருந்த நிலை​யில், நாம் எத்​தனை போர் விமானங்​களை இழந்​தோம் என்ற விவரத்தை மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கர் வெளி​யிட வேண்​டும். இது பாது​காப்பு குறை​பாடு அல்ல, குற்​றம். ஆபரேஷன் சிந்​தூர் விவ​காரத்​தில் நமது தேச மக்​கள் உண்மை நிலையை அறிய வேண்​டும். இதுதொடர்​பாக அவர்​ தனது மவுனத்​தைக்​ கலைய வேண்​டும்​” என்​றார்​.

x