அகதிகளுக்கான தர்ம சத்​திரம் அல்ல: இந்தியா இலங்கை தமிழர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து


புதுடெல்லி: 140 கோடி மக்​களு​டன் போராடி வரு​கிறோம். இந்​தியா ஒன்​றும் தர்ம சத்​திரம் இல்லை என்று இலங்​கை​யைச் சேர்ந்த தமிழர் ஒரு​வர் தொடர்ந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் கருத்து தெரி​வித்​துள்​ளது. இலங்​கை​யைச் சேர்ந்த தமிழர் ஒரு​வர், எல்​டிடிஇ அமைப்​புடன் தொடர்​புடைய​வர் எனக் கூறி இந்​தி​யா​வில் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்​யப்​பட்​டார்.

அவர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்டு விசா​ரணை நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்த வழக்​கில் 2018-ம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்​டனை விதிக்​கப்​பட்​டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​ட​போது அவரது தண்​டனை 7 ஆண்​டு​களாகக் குறைக்​கப்​பட்​டது. மேலும், தண்​டனைக் காலம் முடிந்​ததும் நாட்டை விட்டு உடனடி​யாக வெளி​யேற வேண்​டும் என்​றும் நீதி​மன்​றத்​தால் உத்​தர​விட்​டப்​பட்​டது.

இதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் அந்த நபர் மேல்​முறை​யீடு செய்​தார். “அக​தி​கள் முகாமிலேயே 3 ஆண்​டு​களாகத் தடுத்து வைக்​கப்​பட்​டுள்​ளேன். என்​னுடைய மனை​வி​யும், குழந்​தைகளும் இங்​கேயே தங்கி உள்​ளனர்.

தாய்​நா​டான இலங்​கை​யில் நிலைமை மோச​மாக உள்​ளது. அங்கு எங்​களுக்​குப் பாது​காப்பு இல்​லை. எனவே, எனது தண்​டனையை ரத்து செய்​வதோடு, இந்​தி​யா​விலேயே தங்​கி​யிருக்க நீதி​மன்​றம் அனு​ம​திக்​கவேண்​டும்” என்று அவர் கோரிக்கை விடுத்​திருந்​தார். இந்த வழக்கு நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, கே.​வினோத் சந்​திரன் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் கூறிய​தாவது: ஏற்​கெனவே இங்கு 140 கோடி மக்​களு​டன் போராடி வரு​கிறோம். இந்​தியா ஒன்​றும் தர்ம சத்​திரம் கிடையாது. உலக நாடு​கள் பலவற்​றி​லிருந்து இங்கு பலர் வந்து அகதி​யாகத் தங்கி வரு​கின்​றனர். அனை​வரும் வந்து தங்​கு​வதற்கு இது தர்ம சத்​திரம் கிடையாது.

உலக அகதி​கள் அனை​வரும் இங்கு வந்து தங்​கலாம் என இந்​திய அரசு அறி​வித்​துள்​ள​தா? அனைத்து வெளி​நாட்​டினரை​யும் இங்கு தங்க வைக்க முடி​யாது. இங்கு அகதி​யாக வந்து தங்​கி​யிருக்க உங்​களுக்கு உரிமை கிடை​யாது. தண்​டனைக் காலம் முடிந்​ததும் இங்கு தங்​கி​யிருக்க முடி​யாது. நீங்​கள் வேறு நாட்​டுக்​குச் செல்​லலாம். இவ்​வாறு நீதிப​தி​கள்​ தெரி​வித்​தனர்​.

x