புதுடெல்லி: ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ம.பி. அமைச்சர் விஜய் ஷா மீது வழக்கு பதிவு செய்ய ம.பி. உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விஜய் ஷா மனு தாக்கல் செய்தார்.
அவரது மனு நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சரின் கருத்தால் ஒட்டுமொத்த நாடும் வெட்கப்படுகிறது என்று நீதிபதிகள் கூறினர். விஜய் ஷா மன்னிப்பு கோரியுள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறியதை நீதிபதிகள் ஏற்கவில்லை.
“எந்த வகையாக மன்னிப்பை அவர் கோரியுள்ளார் என நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் விளைவுகளில் இருந்து தப்பிக்க மட்டும் மன்னிப்பு கோரலாம் அல்லது முதலைக்கண்ணீர் வடிக்கலாம். அவர் உண்மையான மன்னிப்பு கோர வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சருக்கு எதிரான வழக்கை விசாரிக்க செவ்வாய்க்கிழமைக்குள் (இன்றுக்குள்) சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க ம.பி. அரசுக்கு உத்தரவிட்டனர்.
“இக்குழுவில் பிற மாநிலத்தை சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர் பெண் அதிகாரியாக இருக்க வேண்டும். வரும் 28-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அக்குழு கேட்டுக்கொள்ளப்பட வேண்டும். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணிக்கும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.