பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து பஞ்சாப் பொற்கோயிலை இந்திய ராணுவம் பாதுகாத்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து இந்திய ராணுவத்தின் 15-வது காலாட்படை பிரிவின் கமாண்டிங் அதிகாரி மேஜர் ஜெனரல் கார்த்திக் சி.சேஷாத்ரி நேற்று கூறியதாவது:
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை குறி வைத்து நாம் தாக்குதல் நடத்தினோம். இதுபோல் இந்தியாவில் குறிவைக்க பாகிஸ்தானுக்கு எந்த இலக்கும் இல்லை. எனவே ராணுவ நிலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சிவிலியன் இலக்குகளை அவர்கள் குறி வைக்கலாம் என நாங்கள் எதிர்பார்த்தோம். இவற்றில் அமிர்தசரஸ் பொற்கோயிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதினோம். எனவே பொற்கோயிலுக்காக கூடுதல் நவீன வான் பாதுகாப்பு சாதனங்களை நாங்கள் திரட்டியிருந்தோம்.
எதிர்பார்த்தது போல மே 8-ம் தேதி அதிகாலை இருளில் பொற்கோயிலை குறி வைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பறந்து வந்தன. இவை அனைத்தையும் நமது வான் பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பொற்கோயிலுக்கு சிறு கீறல் கூட ஏற்பட அவர்கள் அனுமதிக்கவில்லை. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.