பெங்களூருவில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழை: நேற்று (ஞாயிறு) இரவு முதல் இன்று (திங்கள்) காலைக்குள் பெங்களூருவில் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரு நகரில் 105.5 மிமீ மழை பெய்துள்ளது.
இலங்கை அகதியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்: ‘உலகம் முழுவதிலும் இருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? நாங்கள் 140 கோடியுடன் போராடுகிறோம். இது எல்லா இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை மகிழ்விக்கக் கூடிய தர்மசாலை அல்ல. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்குச் செல்லுங்கள் ’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ம.பி. அமைச்சர் விஜய் ஷா மீதான வழக்கில் சிறப்பு விசாரணை குழு: மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா, ஆபரேஷன் சிந்தூரின் போது ஊடகங்களுக்கு விளக்கமளித்த கர்னல் சோபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க மாநில டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை அனுமதிக்க முடியாது!: 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் அனுமதிக்கப்படாது. இந்த விஷயத்தை அமைச்சகம் பரிசீலித்துள்ளது என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி: ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் ஒரு பகுதியாக பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைப்பது குறித்து பாகிஸ்தானுக்குத் தகவல் கொடுத்ததால் இந்தியா எத்தனை போர் விமானங்களை இழந்தது என்று அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.