கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட் முதல் பைடனுக்கு புற்றுநோய் வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


அனைத்துக் கட்சி குழுவிலிருந்து திரிணமூல் விலகல்: பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல கட்சிக் குழுவில் இருந்து விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைமை, மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய யூசுப் பதான் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட்: வடக்கு கேரளாவில் வயநாடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பேரிடர் மீட்பு, வடிகால்களை சுத்தம் செய்தல் மற்றும் நிவாரண முகாம் போன்றவற்றை தயார் நிலையில் வைக்கவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (மே 18, 2025) தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ,"ஜோ பைடனின் மருத்துவ அறிக்கை தொடர்பாக சமீபத்தில் தகவல் அறிந்து நானும் மெலனியாவும் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். ஜோ விரைவில் குணமடைய விரும்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி தொழிலதிபர் கைது: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரபிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையில், ஷாஜாத் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார் என்பதும், அவர் பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு பல முறை பயணம் செய்து, எல்லையைத் தாண்டி அழகுசாதனப் பொருட்கள், உடைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொலை: இந்தியாவில் பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைஃபுல்லா காலித், பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். சைஃபுல்லாவிடம் வெளியே செல்வதை குறைக்குமாறு லஷ்கர் அமைப்பு அவருக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

x