புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் 15 ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து விலகி, இந்திரபிரஸ்தா விகாஸ் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சிக்கு ஹேம்சந்த் கோயல் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் கோயல், ஹிமானி ஜெயின், தேவேந்திர குமார், ராஜேஷ் குமார் லாடி, சுமன் அனில் ராணா, தினேஷ் பரத்வாஜ், ருணாக்ஷி சர்மா, மனிஷா, சாஹிப் குமார், ராக்கி யாதவ், உஷா சர்மா மற்றும் அசோக் பாண்டே போன்ற முக்கிய ஆம் ஆத்மி தலைவர்களும் புதிததாக ஆரம்பிக்கப்பட்ட இந்திர பிரஸ்தா விகாஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
ஆம் ஆத்மியிலிருந்து விலகிய கவுன்சிலர்கள் கூட்டாக வெளியிட்ட ராஜினாமா கடிதத்தில், "நாங்கள் அனைவரும் 2022-ஆம் ஆண்டில் டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஆனால், கட்சியின் உயர் தலைமையால் டெல்லி மாநகராட்சியை சுமுகமாக நடத்த முடியவில்லை.
இதன் காரணமாக கட்சி எதிர்க்கட்சி வரிசைக்கு வந்தது. பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால், கவுன்சிலர்களான நாங்கள் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறோம்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் கூண்டோடு விலகி புதிய கட்சியை ஆரம்பித்துள்ளது ஆம் ஆத்மிக்கு கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.