டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 15 பேர் ராஜினாமா: ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்த பெரும் அதிர்ச்சியாக, டெல்லியில் மாநகராட்சியின் 15 கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து, இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட இந்திரபிரஸ்த விகாஸ் கட்சிக்கு ஹேம்சந்த் கோயல் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் 600 ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது எப்படி?: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், 600க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின. இதுகுறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா 100% வரிகளை குறைக்க தயாராக உள்ளது: ட்ரம்ப்: இந்தியா உலகின் மிக உயர்ந்த வரிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. அவர்கள் வணிகம் செய்வதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறார்கள். அமெரிக்கப் பொருட்களுக்கான 100% வரிகளைக் குறைக்க இந்தியா தயாராக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். புது டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு: ஒடிசா முழுவதும் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட மின்னல் தாக்குதல் சம்பவங்களில் ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். நேற்று பிற்பகலில் இடியுடன் கூடிய மழை, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட பிரிட்டன் விருப்பம்: இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்த போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை உறுதி செய்ய அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன் பணியாற்றி வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். மேலும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தங்களின் கடமைகளை நிறைவேற்ற அனைத்து தரப்பையும் அவர் வலியுறுத்தினார்.