பாக். பிரதமர் ஒப்புதல் முதல் கனிமொழி, சசி தரூருக்கு பொறுப்பு வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


இந்திய தாக்குதல் பற்றி மனம் திறந்த பாக். பிரதமர்: ஆபரேஷன் சிந்தூரின்போது தங்கள் நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார். கடந்த 10-ம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் அந்தத் தகவலை ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

90.23 மீ. தூரம் ஈட்டியை எறிந்த முதல் இந்தியர்: தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா. இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அவர், 90+ மீட்டர் தூரத்தை கடந்து ஈட்டி எறிவது இதுவே முதல் முறை. கடந்த 2022-ல் ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்கில் 89.94 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்திருந்தார். தற்போது அதை முறியடித்துள்ளார்.

கனிமொழி, சசி தரூருக்கு முக்கிய பொறுப்பு: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தலைமையிலான ஒவ்வொரு குழுவிலும் 5–6 எம்.பி.க்கள் இருப்பார்கள் என்றும், அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு இவர்கள் பயணம் செய்வார்கள் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘தேசத்துக்கான என் சேவையில் குறைவைக்க மாட்டேன்’ - சசி தரூர்: “சமீபத்திய நிகழ்வுகள் குறித்து நாட்டின் பார்வையை முன்வைப்பதற்காக ஐந்து முக்கிய தலைநகரங்களுக்கு செல்ல இருக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவிற்கு தலைமையேற்க மத்திய அரசு அழைத்திருப்பதற்கு பெருமை கொள்கிறேன். தேசத்துக்கு என் சேவை தேவைப்படும்போது அதில் குறைவைக்க மாட்டேன்.” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மாணவர் கைது: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகவும், முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் சந்தேகத்தின் பேரில் ஹரியானாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஓரளவு அமைதி திரும்பியுள்ள நேரத்தில் ஹரியானாவில் நடந்த இரண்டாவது கைது இதுவாகும்.

x