ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம் முதல் ப.சிதம்பரம் கவலை வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


‘இந்தியா - பாக். போரை நிறுத்தியது நான்தான்’ - ட்ரம்ப்: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான். அது நடக்காமல் போயிருந்தால் நிலைமை மேலும் சிக்கலாகி இருக்கும்” என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் இடையே அமெரிக்கா தான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக ஆறாவது முறையாக அவர் தெரிவித்துள்ளார்.

‘இண்டியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை’ - ப.சிதம்பரம்: "இண்டியா கூட்டணியின் ஒற்றுமை அப்படியே இருக்கிறதா என்பது குறித்து எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், அதன் எதிர்காலம் பிரகாசமாக இல்லை. இந்தியாவின் தேர்தல்களை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஏனெனில் அது இன்னும் தேர்தல் ஜனநாயகமாகவே இருக்கிறது." என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மே 20 முதல் 30 வரை 15 மாநிலங்களில் ’ஜெய் ஹிந்த் சபா’ கூட்டம்: நாட்டின் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களை நடத்த இருக்கிறது. மே 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இது நடைபெற இருக்கிறது. இக்கூட்டங்களில், மத்திய அரசு தேசிய பாதுகாப்பை கையாள்வது குறித்தும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் குறித்தும் கேள்விகளை எழுப்ப உள்ளது.

“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்” - பாகிஸ்தான்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் , ​​இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், “அமைதிக்காக நாங்கள் (இந்தியாவுடன்) பேசத் தயாராக இருக்கிறோம். அமைதிக்கான நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்சினையும் அடங்கும்” என்று கூறினார்.

ஹாங்காங், சிங்கப்பூரில் மீண்டும் கரோனா பரவல்: ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள், குறிப்பாக இணை நோய் உள்ளிட்ட ஆபத்துகள் இருப்போர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

x