பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச முகமை கண்காணிக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்


ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச முகமை கண்காணிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதல் முறையாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார்.

அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: கடந்த சுமார் 40 ஆண்டுகளாக எல்லைக்கு அப்பால் (பாகிஸ்தான்) இருந்து ஏவப்படும் தீவிரவாதத்தை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்றனர். குறிப்பாக இந்தியாவின் நெற்றியில் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது நமது பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. இது தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கை ஆகும்.

பாகிஸ்தான் பொறுப்பற்ற முறையில் இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்ததை உலக நாடுகள் அறியும். ஆனால், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா பணியாது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதிலிருந்தே தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாடு எவ்வளவு வலிமையானது என்பதை அறிய முடியும்.

பொறுப்பற்ற முறையிலும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்ளும் பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்காது என கருதுகிறேன். எனவே அவை சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டியது அவசியம்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 21 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு சென்றார். அப்போது, தங்கள் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களை நடக்க அனுமதிக்க மாட்டோம் என அந்த நாடு தெரிவித்தது. ஆனால், பாகிஸ்தான் இந்தியாவுக்கு துரோகம் செய்துவிட்டது. அதற்கான பலனை அந்த நாடு இப்போது அனுபவித்து வருகிறது. தீவிரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்தால் அந்த நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகும்.

தீவிரவாதத்துக்கு எதிரான கொள்கையை பிரதமர் மோடி தெளிவாக வகுத்துள்ளார். இந்தியா மீது இனியும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் அது போராகவே கருதப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சராக, உங்கள் அனைவரையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் தைரியத்தையும் வீரத்தையும் நான் அறிவேன். அதேநேரம் பஹல்காம் போன்ற சம்பவம் மீதான உங்கள் கோபத்தையும் நான் அறிவேன். பஹல்காம் தாக்குதலுக்கு தைரியத்துடனும் ஞானத்துடனும் நீங்கள் பழி வாங்கி உள்ளீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x