இந்திய விமான நிலையங்களில் துருக்கி நிறுவனத்தின் ‘கிரவுண்ட் ஹேண்ட்லிங்’ பணி அனுமதி ரத்து!


கோப்புப்படம்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்படுகின்ற காரணத்தால் வர்த்தக ரீதியான உறவு முறிவு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. அதன்படி தற்போது இந்தியாவில் அமைந்துள்ள 9 விமான நிலையங்களின் கிரவுண்ட் ஹேண்ட்லிங் பணியை கையாளும் துருக்கியை சேர்ந்த ‘செலிபி ஏவியேஷன்’ (Celebi Aviation) நிறுவனதுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அண்மையில் போர் பதற்றம் ஏற்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை கையில் எடுத்தது இந்தியா. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் இதில் அழிக்கப்பட்டன. தொடர்ந்து எல்லையோர இந்திய மாநிலங்களில் ட்ரோன் மற்றும் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் முயற்சியை முன்னெடுத்தது பாகிஸ்தான்.

எதிர் தரப்பின் முயற்சியை வான் பாதுகாப்பு கவச அமைப்பு மூலம் முறியடித்தது இந்தியா. அதோடு பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியும் கொடுத்தது. பாகிஸ்தானின் நாட்டின் விமானப்படை தளங்களை இந்தியா தகர்த்தது. இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு துணை நிற்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்பட்ட காரணத்தால் அந்த தேசத்துடனான வர்த்த உறவுகளை இந்தியா முறித்துக் கொண்டது. பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்களை விநியோகித்ததாக தகவல். குறிப்பாக அங்கிருந்து இறக்குமதி ஆகும் ஆப்பிளை புனே வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது செலிபி ஏவியேஷனுக்கு வழங்கப்பட்ட அனுமதியை தேசிய பாதுகாப்பு நலனை சுட்டிக்காட்டி ரத்து செய்துள்ளது மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம். செலிபி கிரவுண்ட் ஹேண்ட்லிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மும்பை, டெல்லி, கொச்சி, கண்ணூர், பெங்களூரு, ஹைதராபாத், கோவா, அகமதாபாத் மற்றும் சென்னை விமான நிலையங்களில் கிரவுண்ட் ஹேண்ட்லிங் மற்றும் சரக்கு சேவை சார்ந்து செயல்பட்டு வந்தது. தற்போது அதை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் 10 சதவித பங்குகளை சுமேயே எர்டோகன் என்பவர் தன்வசம் வைத்துள்ளார். அவரது கணவர் செல்சுக் பைரக்தர் தான் பாகிஸ்தானுக்கு ட்ரோன்களை வழங்கி உதவியுள்ளார். இதோடு இந்நிறுவனம் டெல்லியில் விஐபி சார்ந்த விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அதை குறித்து கொண்டு தற்போது அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1958-ல் செலிபி ஏவியேஷன் நிறுவனம் நிறுவப்பட்டது. உலக அளவில் சுமார் ஆறு நாடுகளில் உள்ள சுமார் 70 விமான நிலையங்களின் கிரவுண்ட் ஹேண்ட்லிங் பணியை இந்நிறுவனம் கவனித்து வருகிறது. சுமார் 15,000 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியில் உள்ளனர்.

x