ஆப்பிள் நிறுவனத்துக்கு ட்ரம்ப் ‘செக்’ முதல் சிந்து நதி விவகாரம் வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


பாகிஸ்தான் அணு உலைகளில் கதிர்வீச்சு கசிவு இல்லை: சர்வதேச அணுசக்தி முகமைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு அல்லது வெளியீடு எதுவும் இல்லை என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிபட தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்துக்கு ட்ரம்ப் ‘செக்’ வைப்பதன் பின்னணி என்ன?: ட்ரம்பின் சமீபத்திய கருத்துக்களால் இந்திய அதிகாரிகள் விரக்தியடைந்திருக்கும் நிலையில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அமைய உள்ளது குறித்து ட்ரம்ப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் அவர், “நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை விரும்பவில்லை. இந்தியாவில் அவர்களே அவர்களை கவனித்துகொள்வார்கள்” எனக் கூறியுள்ளார்.

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையின்போது, ​​பயங்கரவாதிகள் ஒரு கொட்டகையில் பதுங்கியிருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நிறுத்தி வைத்துள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தானின் குடிநீர் தேவையில் 70 சதவீதத்துக்கும் மேல் பூர்த்தி செய்யக்கூடியது என்பதால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு அந்நாட்டுக்கு மிகப் பெரிய இடி ஆகும்.

சிரியாவின் இடைக்கால அதிபரை புகழ்ந்த ட்ரம்ப்!: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரபு நாடுகளுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷராவை ட்ரம்ப் சந்தித்திருக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் பயங்கரவாதியை ட்ரம்ப், “இளமையான, வலுவான, கவர்ச்சிகரமான நபர்” என்று தெரிவித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

x