குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் முதல் சுப்ரீம் கோர்ட் கண்டனம் வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் 14 கேள்விகள்: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று வினவி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் 14 கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில் ஆளுநர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.

பாஜக அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: கர்னல் சோபியா குரேஷி குறித்த மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கண்டித்துள்ளார்.

“பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கண்காணிக்க வேண்டும்” - ராஜ்நாத் சிங்: பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஆபரேஷன் சிந்தூரின் போது நீங்கள் அனைவரும் செய்தவற்றிற்காக முழு தேசமும் பெருமை கொள்கிறது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

“தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு” - ராகுல் வலியுறுத்தல்: நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 24 மணி நேரமும் அநீதியை எதிர்கொள்கின்றனர். பாகுபாடு காட்டப்பட்டு கல்வி முறையிலிருந்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள்.தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு எனும் சுவரை உடைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பிஎஸ்எஃப் வீரர் மீட்கப்பட்டது எப்படி?: பாகிஸ்தான் ராணுவத்தால் ஏப்ரல் 23-ம் தேதி கைது செய்யப்பட்ட பிஎஸ்எப் ஜவான் புர்ணம் குமார் ஷா நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரை பாகிஸ்தான் ராணுவம் எவ்வாறு நடத்தியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மேலும், அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

x