தேசியக் கொடி யாத்திரையில் உத்தராகண்ட் முதல்வர் பெருமிதம்: உத்தராகண்ட்டில் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான மூவர்ண சவுர்ய சம்மான் யாத்திரை புதன்கிழமை நடைபெற்றது. அங்குள்ள சித்பாக்கின் சவுர்ய ஸ்தலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை இந்த யாத்திரை நடந்தது. இந்த நிகழ்வின்போது, உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு சவுர்ய ஸ்தலத்தில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மலர் அஞ்சலி செலுத்தினார்.
உ.பி.யில் அமைகிறது இந்தியாவின் 6-வது செமிகண்டக்டர் ஆலை: உத்தரப் பிரதேசத்தின் ஜெவாரில் நாட்டின் 6-வது செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஹெச்சிஎல் மற்றும் ஃபாக்ஸ்கான் கூட்டு முயற்சியுடன் அமைக்கப்பட உள்ள இந்த ஆலை ஜெவார் விமானநிலையத்துக்கு அருகில் அமைய உள்ளது. இது 2027-ல் இருந்து இயங்கத் தொடங்கும்.
துருக்கி ஆப்பிளை புறக்கணித்த புனே வியாபாரிகள்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கிய துருக்கிக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கி ஆப்பிளை புனே வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர். இதன் காரணமாக துருக்கிக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
6,000+ ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை, அதாவது 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டிருக்கும் போட்டியை சமாளிப்பதற்காக செயற்கை நுண்ணறிவை (AI) நோக்கி கவனம் செலுத்தி வருவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் டெக் துறையில் பணிபுரியும் பலருக்கும் பெரிய அச்சத்தைக் கடத்தியிருக்கிறது.
பிஎஸ்எஃப் வீரரின் தந்தை நெகிழ்ச்சி: பாகிஸ்தானிடம் பிடிபட்டிருந்த எனது மகனை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத் தந்திருக்கின்றன, அனைவருக்கும் நன்றி. எனது மகன் தொடர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் பணியினைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆபரேஷன் சிந்தூருக்காக நான் பிரதமர் மோடியை பாராட்டுகிறேன் என்று பிஎஸ்எஃப் வீரர் பி.கே. ஷாவின் தந்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.