உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு முதல் ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகரிப்பு வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு: உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நீதிபதி பி.ஆர்.கவாய் நவம்பர் 2025-ல் ஓய்வு பெற உள்ளதால், சுமார் 6 மாதங்களுக்கு மட்டுமே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார்.

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட வீரரை ஒப்படைத்தது பாக். - கடந்த ஏப்ரல் 23-ம் தேதி எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.ஷா பஞ்சாப் பகுதியில் எல்லையை தாண்டியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (மே.14) அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

'அருணாச்சல் எங்களுடையதே' - இந்தியா திட்டவட்டம்: அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பெயரை மாற்றினாலும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனாவால் மாற்ற முடியாது என்று கண்டனத்தைக் காட்டமாக பதிவு செய்துள்ளது இந்தியா.

மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப்: இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தனது தலையீடு இருந்தது என்று மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். “நண்பர்களே வாருங்கள் நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம். அணு ஆயுதங்களை விற்க வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை விற்பனை செய்வோம்.” என்று தனது சமரசப் பேச்சு விவரத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகரிப்பு: 70 வயதான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது பாதுகாப்பில் சிறப்பு குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, விஐபிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

x