“உண்மையான அதிகாரமளித்தல் என்பது ...” - குடியரசு துணைத் தலைவர்: உண்மையான அதிகாரமளித்தல் என்பது இலவசங்கள், நன்கொடைகள் மூலம் நிகழாது என்றும், போதுமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் மூலம் அவர்கள் தாங்களாகவே அதிகாரம் பெறுவதே உண்மையான அதிகாரம் அளித்தலாக இருக்கும் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
“பாக். ராணுவத்தை இந்தியா தோற்கடித்தது” - மோடி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்குச் சென்று வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற பதில் தாக்குதல் இனி இந்தியாவின் புதிய வழக்கமாக இருக்கும். பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியா தோற்கடித்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் லட்சுமண ரேகை இப்போது தெளிவாக உள்ளது என கூறினார்.
இந்தியாவுடனான மோதலில் 11 வீரர்கள் பலி - பாக். ராணுவம் - மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மோதலில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 5 பேர் வீர மரணமடைந்ததாகவும், பாகிஸ்தான் தரப்பில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ட்ரம்ப்புக்கு மோடி செக்? - அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் இதனை இந்தியா தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், எந்த வகையான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்பது பற்றி அதில் கூறப்படவில்லை. இந்த நடவடிக்கை ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தியாவின் முதல் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க கருத்துக்கு இந்தியா மறுப்பு: போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் வர்த்தகம் நிறுத்தப்படும்’ என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அதிபர் ட்ரம்ப்பின் அறிக்கைகள் குறித்த தனது நிலைப்பாட்டை இந்தியா, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது இந்தியா.