ஆதம்பூர் விமானப்படை தளத்தில் மோடி முதல் பஞ்சாப் கள்ளச்சாராய பலி வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


விமானப்படை தளத்தில் வீரர்களுடன் கலந்துரையாடிய மோடி: பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்ககளுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார். மேலும், நமது ஆயுதப்படைகள் நமது தேசத்திற்காகச் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“ட்ரம்ப் கருத்துக்கு மோடி பதிலளிக்காதது ஏன்?” - காங்கிரஸ்: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்தாவிட்டால், இரு நாடுகளுடனான வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தும் என அச்சுறுத்தியதை அடுத்தே மோதல் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் கூறியது பற்றி பிரதமர் நரேந்திர மோடி அமைதி காத்தது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியை கொண்டாட பாஜக கொடி யாத்திரை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாஜக கொண்டாடும் வகையில் நாடு முழுவதிலும் ‘திரங்கா யாத்ரா (கொடி யாத்திரை)’ நடத்துகிறது. நாடு முழுவதிலுமான பாஜகவினரின் இந்த கொடி யாத்திரை, மே 13 முதல் 23 வரை 11 நாட்களுக்கு நடைபெற உள்ளன.

பயங்கரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும், 'பயங்கரவாதமற்ற காஷ்மீர்' என்ற வாசகத்தைக் கொண்ட சுவரொட்டிகள், ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

x