புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியிருப்பதால் மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையம்(ஏஏஐ) நேற்று காலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மூடப்பட்டிருந்த, 32 விமான நிலையங்களும் இப்போது சிவில் விமான போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன.
பயணிகள் விமான நிறுவனங்களுடன் நேரடியாக விமானங்களின் இயக்கம் குறித்து சரிபார்த்து, சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விமான நிறுவனத்தின் வலைதளங்களைக் கண்காணிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மூடப்பட்டிருந்த ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, புஜ், பிகானீர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சால்மர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கண்ட்லா, காங்ரா (காகல்), கேஷோட், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லே, லூதியானா, முந்த்ரா, நாலியா, பதான்கோட், பாட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, நகர், தோய்ஸ், உத்தர்லாய் ஆகிய 32 விமான நிலையங்கள் தற்போது மீண்டும் சிவில் விமான போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்த பதற்றம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள இந்த 32 விமான நிலையங்களில் சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.