எல்லையில் ‘அமைதி’ முதல் மோடி ஆலோசனை வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை: நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்றும் ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

19 நாட்கள் மோதலுக்குப் பின் ‘அமைதி’: “19 நாட்கள் மோதலுக்குப் பின், இந்தியாவும், பாகிஸ்தானும் சனிக்கிழமை மாலை மோதல் நிறுத்தத்துக்கு உடன்பட்டதைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய ஜம்மு காஷ்மீர் பகுதிகள் மற்றும் பிற சர்வதேச எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் மே 11 - 12 இடைப்பட்ட இரவில் அமைதி நிலவியது. குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு என எதுவும் நிகழவில்லை.” என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

விக்ரம் மிஸ்ரி மீது ‘ட்ரோல்’ விவகாரம்: தன் மீதான அளவுக்கு மீறிய வசைபாடல்கள், இணைய மிரட்டல்களால், வெளியுறவுத் துறையில் முதன்மைப் பொறுப்பு வகிக்கும் விக்ரம் மிஸ்ரி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தையே ‘லாக்’ செய்து பிரைவசியை நாட வேண்டிய அவலச் சூழல் ஏற்பட்டது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், அவருக்கு அரசியல் பிரமுகர்கள் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர். அநாகரிக நெட்டிசன்கள் மீது அவர்கள் நடவடிக்கை கோரியுள்ளனர்.

10 செயற்கைக்கோள்கள் கண்காணித்து வருகிறது: இஸ்ரோ: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. நமது செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் இல்லாவிட்டால், பல்வேறு சாதனைகளை நாம் நிகழ்த்தியிருக்க முடியாது என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

32 விமான நிலையங்களில் மீண்டும் சேவை தொடக்கம்: கடந்த வாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க சிவில் விமான அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக இன்று (திங்களன்று) அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

x