புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராகுல் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடி
யாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒருமனதாக வேண்டுகோள் விடுக்கின்றன.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பால் முதலில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் குறித்து மக்களுக்காக எம்.பி.க்கள் விவாதிக்க வேண்டியது முக்கியம். நாம் எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு, நாம் இணைந்து தீர்வு காண இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த கோரிக்கையை நீங்கள் உடனடியாக பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்’’ என கூறியுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சூழலில், ஆபரேஷன் சிந்தூர், அமெரிக்கா முதலில் அறிவித்த போர் நிறுத்தம் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், அதே வேண்டுகோளுக்காக நானும் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.