“இந்த முறை பாகிஸ்தான் எதாவது ராணுவ நடவடிக்கை எடுக்கத் துணிந்தால், நாங்கள் என்ன செய்வோம் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும்” என்று இந்தியாவின் வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் தெரிவித்தார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் எவ்வாறு திட்டமிடப்பட்டது, அது எவ்வாறு செயல்படுத்தப்பட்டது, எத்தகைய இழப்புகளை எதிரிக்கு அது ஏற்படுத்தியது என்பது தொடர்பாக முப்படைகளின் மூத்த அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை விவரித்தனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் மே 7-ல் இந்தியா குறிவைத்த 9 பயங்கரவாத இலக்குகளில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது, வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் கூறும்போது, “ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது கோழைத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் கேரியர் போர்க் குழு, மேற்பரப்புப் படைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைப்புகள் உடனடியாக முழு போர் தயார்நிலையுடன் கடலில் நிறுத்தப்பட்டன.
பயங்கரவாதத் தாக்குதல் நடந்த 96 மணி நேரத்திற்குள் அரபிக் கடலில் பல ஆயுதத் தாக்குதல்கள் மற்றும் கடல் தந்திரோபாயங்கள் குறித்த நடைமுறைகளை நாங்கள் சோதித்து மேம்படுத்தினோம். வடக்கு அரேபியக் கடலில் எங்கள் படைகள் தீர்க்கமான மற்றும் தடுப்பு நிலையில் முன்னோக்கி நிறுத்தப்பட்டன.
கராச்சி உட்பட கடலிலும் நிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளைத் தாக்க முழு தயார்நிலை மற்றும் திறனுடன் நாங்கள் இருந்தோம். இந்திய கடற்படையின் முன்னோக்கிய முனைப்புகளால், பாகிஸ்தான் கடற்படை மற்றும் விமானப் பிரிவுகள் தற்காப்பு நிலையில் இருக்க தள்ளப்பட்டன. பெரும்பாலும் துறைமுகங்களுக்குள் அல்லது கடற்கரைக்கு மிக அருகில், நாங்கள் தொடர்ந்து கண்காணித்தோம்.
எங்கள் பதிலடி முதல் நாளிலிருந்தே அளவிடப்பட்டது, விகிதாசாரமானது, விரிவாக்கமற்றது மற்றும் பொறுப்பானது. நாங்கள் பேசும்போது, பாகிஸ்தானின் எந்தவொரு விரோத நடவடிக்கைக்கும் தீர்க்கமாக பதிலளிக்க நம்பகமான தடுப்பு நிலையில் இந்திய கடற்படை கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முறை பாகிஸ்தான் எதாவது ராணுவ நடவடிக்கை எடுக்கத் துணிந்தால், நாங்கள் என்ன செய்வோம் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும்” என்று எச்சரித்தார்.